(கொஞ்சமே… கொஞ்சம்…)

யார் அது சொன்னார் உந்தனுக்கே−
பார், இது அமுதம் என்பதையே?
சேர்ந்திரு கரமும் துணை புரிய−
சீர் அதை, வைத்தாயோ வாயுள்ளே?

ஒரு கரம் கழலைப் பற்றுகையில்−
உருகி விடாதோ, உன் மனமே?
பெருகிடும் பேரின்ப நிலையதனை−
பெம்மான் தாங்குவதும் எங்கனமே?;

மண்ணவர், விண்ணவர் பார்த்திருக்க,
உன்னவர் அடியவர் வேண்டி நிற்க−
எண்ணம் மேவிடும் எழில் அமுதை−
எளிதாய், அடைந்தின்பம் காண்பாயோ?

தன்னந்தனியனாய் நீ மட்டும்−
கன்னல் கழலதைச் சுவைப்பாயோ?
என்னைப் போன்றோர் உணர்ந்திடவும்,
ஏதேனும் கொஞ்சமே, கொடுப்பாயோ?

பகிர்ந்துண்டு வாழணும் என்பதையும்−
பெற்றவள் சொல்லித் தரவில்லையோ?
பல்லுயிர் பேணிடும் அவ்வருமருந்தை−
பிறர்க்களிக்காததும் தவறில்லையோ?

போனதெல்லாம் போக, நீ விட்டுவிடு;
பாகம் எனக்கும், ஒன்று தந்து விடு;
ஆனதே உனக்கும் ஒரு துளியென்று−
அன்பில் கலந்தே, கொஞ்சம், கிள்ளி கொடு!

(அருள்வாயே, அஞ்சனை மைந்தா..)

எண்ணிய எண்ணம் மனம் போல் கனியவும்,
மின்னல் விரைவாய் காரியம் நிகழவும்,
உன்னில் நிலைத்திடும், உத்தமன் குளிரவும்−
வெண்ணைச் சாற்றி, உனை வழிபடுவோமே!

உருகா வெண்ணையை, உனக்கே அளித்தோம்;
பெருகாதெம் இடர், பரிந்து நீ அருள்வாய்;
இருகரம் குவித்தே, இணையடி சேர்ந்தோம்;
ஒரு கணம் மறவாதே, உறுதுணை வருவாய்!

கருகா மலராய், கசிந்திடும் காதலால்−
சிறு மா நாழிகை, உனக்காட்படுவோம்!
தருவாய் தயையும், தயை நிறை ஞானமும்−
பெறுவோம் யாமும், பொருள் நிறை வாழ்வும்!

இருளது விலக்கும் பரிதியும் நீயாய்−
அருளது கொடுக்கும், ஆழ்கடல் நீயாய்−
வருவாய் வாழ்வில் அஞ்சனை மைந்தா!
கருதுவாய் எமையுன் கனிவுக்கு நேராய்!

இராமராம எனும் திவ்யநாமம்−
யாமும் ஏத்தி நின், கழலிணை வீழ்ந்தோம்;
ஆம், ஒரு அபயமே தந்தேன் என்று−
தாமதம் இன்றியே, தோள் புடைத்தெழுவாய்!

(மருந்தாய் வா, மணிவண்ணா..)

கணுவொடு கரும்பை எழுதும் போதே,
காதல் இறைவன், கணை தொடுத்தானே;
அணுவையும் ஆண்டு, அகத்துளே நிறைந்த−
அச்சுதன் தனையே வெளிப்படுத்தினனே!

தூரிகை ஆனது மயிலின் இறகாய்;
தூமனம் போனது அவன்பின் நிழலாய்;
காரிகை விழி முன் கரியவன் உருவம்−
காதலால் விரிந்தது, கனலின் சுகமாய்!

பெண்மையின் ஆசைகள் வெண்ணையாய் திரண்டு−
புனிதனுக்கானதே, நிவேதனப் பொருளாய்;
உண்மையை உணர்ந்த உத்தமன் அவனும்−
உறுதி தளர்ந்தே, தான் உருகுவானோ?

எரிக்கும் தாபம், துடிக்கும் மோகம்−
எண்சாண் உடலிலும், ஏதெதோ யாகம்!
அரியும் அமைத்தான், ஆறவும் விசிறி−
அவன் குழல் பீலியின், வாசமே உதறி!

ஈதெல்லாம் ஆகுமோ, இவள் நோய்க்கு மருந்தாய்?
மாதவன் மடிதானே, மனரணத்துக்கு அருந் தாய்!
ஆதலால் வந்திடு, அச்சுத, விருந்தாய்!
அபலையும், உனக்கன்றி, ஆருக்கோ சரிந்தாள்?..

(அத்தனையும் மாறாதோ?..)

சித்தம் இவள் கலங்கிடவே−
சிரீதரனும் செய்ததென்ன?
பித்தெல்லாம் ஏற்றிவிட்டு−
பார்த்திருக்கும் காரணமோ?

மொத்தம் அவனைக் கேட்டிருக்க−
முத்தம் மட்டும் தந்தானோ?
இத்தனை எப்படி போதுமென−
இவளும் ஊடல் கொண்டாளோ?

ஒத்தன் மட்டும் அனைத்துமென,
ஓடி வந்த பைங்கிளியை−
நித்தம் அலைக்கழித்தானோ?
நெஞ்சம் உருக வைத்தானோ?

தொத்திப் படரும் பூங்கொடியாம்,
தத்தை இவள் சாய்வதற்கு−
அத்தன் தன்னை ஒளித்தானோ?
அழவும் வைத்துப் பார்த்தானோ?

சுத்திச்சுத்தி வந்தவளும்−
சோர்ந்துதான் போனாளோ?
வித்தகனின் விளையாட்டில்,
வேதனையும் அடைந்தாளோ?

நெத்தி மேலே இதழ் பதித்து,
நந்தன் மகன் நினைவழிக்க−
அத்தனையும் மாறோதோ?
அல்லி மீண்டும் அலராதோ?..

(ஆம்பரிசே அருள்வாயா?..)

காத்திருக்கிறாய் எனத் தெரிந்தே−
கடிதில் ஓடி வருகின்றேன்;
பார்த்தே நீ அமர்ந்திருந்தால்−
பரிவதும் யார் என்னிடமே?

மனமெல்லாம் மையலுடன்,
மதிமயங்கி வருகையிலே−
கணமேனும் கனிந்தெனக்கு,
கடாக்ஷித்தால் ஆகாதோ?

ஒருதலையாய் அன்பிருந்தால்−
உறுத்தலாக இருக்கிறதே;
குறுநகையும், காதலுமாய், நீ−
கண்டுகொள்ள மனம் விழைகிறதே!

என்னவனாய் எண்ணியெண்ணி−
ஏங்கிவரும் உன்னவளை,
இனியவளாய் ஏற்று நீயும்−
இசைவதனைச் சொல்வாயோ?

ஆசை மொழி பேசி உந்தன்−
அன்பை உணர வைப்பாயா?
ஓசையின்றி, ரகசியமாய்−
உன்னுள் என்னை ஒளிப்பாயா?

அங்கீகரித்து அடியேனை−
ஆட்கொள்ள வருவாயா?
ஆங்கதனையும் விரைவே நீ,
ஆம்பரிசாய் அருள்வாயா?..

(ஆம்பரிசு:−அடைய வேண்டிய பேறு.)