கேளு மனமே கேளு−அந்த கண்ணன் வருவான் கேளு;
நாளும், பொழுதும், ஏங்கும் உனக்கு−
நன்மையே செய்வான் பாரு,
நன்மையே செய்வான் பாரு! (கேளு)
அன்றே சொன்னான், நன்றே சொன்னான்,
“நானும் உனக்குத் தானென்று!”
இன்று இல்லை−என்றால்−அவனும்
நாளை வருவான், “காண்” என்று!
என்றும் உந்தன் சொந்தம் அவன்−
இதை உணரத் துவங்கு நீ இன்று!
நம்பி நீயும் வேண்டி நின்றால்,
“நம்பி” தானே வந்திடுவான்! (கேளு)
எண்ணத்தில் அவனை நிறுத்தி வைத்தால்,
இன்பம் உன்னைத் தேடி வரும்;
திண்ணமாய் சொன்னேன், தெளிவாய், நீயும்;
துன்பம் இனி, ஓடி விடும்!
கண்ணனின் காதல் மனது−அது
கன்னியே, என்றும் உனது!
நம்பி நீயும் வேண்டி நின்றால்,
“நம்பி” தானே வந்திடுவான்! (கேளு)
இதயம் என்னும் கோயிலிலே−
இறைவன் அவனை, நாட்டு!
உதயம் ஆகும் வாழ்வினிலே−
உவகை, நீயும், கூட்டு!
எதையும் தந்திடும்−அவனுள்ளம்;
ஏந்துவாயே, அருள் வெள்ளம்!
நம்பி நீயும் வேண்டி நின்றால்,
“நம்பி” நெஞ்சில் நீ இருப்பாய்! (கேளு)