​(லலிதா நவரத்னமாலை மெட்டு)

கண்ணன் நவரத்னமாலை 

(ஞான கணேசா)

திருவே சரணம், திருவே சரணம்;

திருவின் திருவே சரணம் சரணம்!

திருநாரணன் தாள் இணைகள் சரணம்!

திருமால் அடியார், சரணம், சரணம்!
(ஆக்கும் தொழில்)

பூக்கும் புதுமலர் பொலிவே போன்று−

சேர்க்கும் பாமாலை நாரணன் மீது−

காக்கும் தொழில் நீ செய்திடுலாயே−

வாக்கின் அரசே, தும்பிக்கையானே!

(வைரம்)
மைநிறக் கண்ணன், மதனகோபாலன்−

மண்ணவர், விண்ணவர் மனம் உறை பாலன்;

வையம் அளந்த எம் வைகுந்தநாதன்−

வைரமாய் திருமுடி மின்னும் ஓர் அழகன்!

பை நாகத்தான், பதும நாபன்−

பன்னிரு நாமமே போற்றிடும் அடியார்−

செய்யும் கிரிசைகள் யாவையும் அவனின்−

செந்தாள் இணைக்கீழ் சேர்த்திடுவாரே!

(நீலம்)
நீலக் கண்ணனை நெஞ்சினில் ஏற்றி−

நாளும் தொழ நம் வினையே அழியும்;

கோலக் கண்ணனின் பாதமே பற்ற−

காலனின் பயம் நம் மனத்தே ஒழியும்!

ஆலிலை பாலகன் ஆரா அமுதன்−

அரிதுயில் கொண்ட அரங்கத்து உள்ளான்−

மேல் மனம் படரவே புண்ணியம் செய்தார்−

மாலவன் குழுவினில் குடிபுகுவாரே!

(முத்து)
எத்தனை நாமங்கள், எத்தனை லீலைகள்!−

அத்தனையும் சொல்லும்−அவனின் பெருமை!

நித்தமும் கை தொழும் இமையோர் தாமும்−

மொத்தமாய் அவனை கண்டிலர் அன்றோ?

முத்துப் பல்லும், முறுவலின் அழகும்−

முனிவரும் மயங்கும் பேரெழில் அன்றோ?

அத்தன், அச்சுதன் அவன் தாள் இரண்டும்−

அடியவர் விழையும் ஓர் அரண் அன்றோ?
(பவளம்)
அந்தி மயங்கிய வான விதானம்−

அண்ணல் அமுதனின் வேங்குழல் கீதம்!−

சிந்தை மயங்கி, செயல் மறந்தொழியும்−

“சோதை” பாலனின் கான அம்ருதம்!

மந்திரம் போல் நம்மை கட்டியும் வைக்கும்−

மாதவன், மாலவன் தீங்குழல் ஓசை!−

எந்தவிடத்துள்ள உயிருமே உருகும்;

எங்கும் நிரம்ப வளமே பெருகும்!
(மாணிக்கம்:−)
ஆணிப்பொன்னால் செய்த அச்சுட்டி−

அசைந்து ஆட, அரவிந்தன் வருவான்;

நாணி, கோணி, தளர் நடையிட்டு−

நந்த குமாரன் நாடகம் புரிவான்!

மாணிக்க ஒளிக் கதிரே போன்று−

மோகனப் புன்னகை மலர் ஒன்று தருவான்;

காணும் யாவரும் கண்கள் மயங்கி−

கண்ணனின் பின்னே வந்திடச் செய்வான்!
(மரகதம்)
இரவும், பகலும், இமையோர் தொழவே−

இருடீகேசன் திருநாடு கொண்டான்!

பரவும் பைங்கிளி பங்கயத்தாளை−

பக்கமே வைத்து தன் அருள் தந்தான்!

மரகத பச்சை மேகலை மின்ன−

மூவேழ் உலகமும் ஆட்சியே செய்தான்;

உரக மெல்லணை மேலே சாய்ந்து−

உலகோர் உய்யவே நெறியும் செய்தான்!

(கோமேதகம்)

தாமே தமக்கு நிகரானவனாம்!−

தாமோதரனாம், தயாபரனாம்!

நாமே விலகி நடந்தாலும் நம்மை−

நாரணன் காப்பான் நல் அன்புடனே!

பூ மேவிய என் மங்கை மணாளன்−

பாதமே சரணம், சரணம் என்றால்−

கோமேதகம் போல் விலைமதிப்பில்லா−

கோவிந்தன் நம்மை காத்திடுவானே!

(பதுமராகம்:−)
பதுமராகத்தின் ஒளியையும் வெல்லும்−

பார்ப்பவர் நெஞ்சினை ஒருங்கே அள்ளும்;

பதுமநாபனின் பேரெழில் வெள்ளம்−

பாடவும், பேசவும் மனமே துள்ளும்!

யதுநந்தன்,யசோதை பாலன்−

யாவரும் போற்றிடும் ஓர் உயர் சீலன்!−

யதுகுல திலகனே யாதும் ஆனான்;−

என் மணிவண்ணன் என்னவன் ஆனான்!
(வைடூரியம்:−)

அடியார் முடிவாழ் வைடூரியமே!

அண்டசராசரம் ஆண்டிடும் கோனே!

முடியுடை மன்னரும்,முனிவரும், ரிஷிகளும்,

மண்டி உன் வாசலில் வந்து நின்றாரே;

கடிபொழில் சூழ் என் கண்ணபுரத்தாய்!

கடிதில் வந்தெனை காத்திடுவாயே!−

செடியாய வினைகள் தீர்க்கும் பெம்மானே!−

சேவித்தேன் என்றும் உன்னை அம்மானே!
நூற்பயன்:−

பக்தியுடன் எவர் கண்ணபிரான்−நவ

ரத்தின மாலை தினம் இசைப்பார்−அவர்

முக்தி தரும் தாள் இணை அடைவாரே!

உத்தம கதியே பெற்றுயர்வாரே!
கண்ணனின் நாமமே காக்கட்டும் என்னை;

கண்ணனின் நாமமே காக்கட்டும் என்னை!

கண்ணனின் நாமமே காக்கட்டும் என்னை;

கண்ணனின் நாமமே காக்கட்டும் என்னை!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s