(அடைந்துய்ந்து போனேனே…..)
கதிர் சாயும் முன்னே−
கட்டாயம் வருவேன் என்றான்;
எதிர்பார்த்து, எதிர்பார்த்து−
சோர்ந்து நான் போனேன்;
மதிள் அரங்கன் மதுசூதனன்
மறந்தொழிந்தான் என்று−
விதியை நான் நொந்து கொண்டு−
விழிநீர் மல்க நின்றேன்!
இனி அவன் வருவதற்கில்லை−
என்று எண்ணியிருந்த வேளை−
புனிதன் பரந்தாமன்−
என் கண் முன்னே நின்றான்!
வேர்த்து, விறுவிறுத்து வேங்கடவன் வந்தான்!
பார்த்ததுமே பரிதவித்தேன் நான்!
கார்குழல் கலைந்தோட அவன் நின்றிருந்த கோலம்−
யார் நெஞ்சும் நெகிழ்ந்து விடும்; அந்தோ பரிதாபம்!
மெய்கோபம் பறந்தோடவும்−நான்
மெய் உருகி,அவன் தலை கோதிவிட்டேன்;
பொய்யாய் ஒரு மன்னிப்பு என்னிடம் கேட்டுவிட்டு,
பொய்யன் அவன், என்னை பரவசப்படுத்தி விட்டான்!
மாயங்கள் செய்வதில் இவன் மன்னன் என்று தெரிந்திருந்தும்−
ஆயர் குலக்கொழுந்தை நான் அப்படியே நம்பி விட்டேன்;
காயமலர் குழலோடு காட்சி தந்த கண்ணன்−
தூயவள் என் அன்பை சோதிக்கவே துடித்தான்!
“இன்றும், மறுநாளும் இங்கிருப்பேன்” என்றான்;
“என்ன ஒரு பாக்கியம்!” என்று அகமகிழ்ந்து போனேன்!
“சொன்ன சொல் மாற மாட்டேன்” என்று சத்தியமே செய்தான்;
பின்னிரவு வேளையில் நான் அறியாமல் மறைந்தான்!
தேடினேன் யமுனை நதிக்கரை ஓரம் எல்லாம்;
வாடினேன் வைகுந்தனைக் காணாமல்!
நாடினேன் நல்லவர் துணையை நான்;
அவருடன்
கூடியே திரிந்தேன் தாமோதரனைக் காண!
எங்கும் தேடி காண்கிலன் யான்−
சங்கு சக்கரம் ஏந்திய என் ப்ரபுவை!
பொங்கும் துயரில் நான் மறுகி நின்ற வேளை−
“இங்குளன் யான்” என்றெனை தன் மடி சாய்த்தான்!
“நீ என்னவன்” என்பதை விடுத்து−
“நான் உன்னவள்” என்றுணர்ந்த நேரம்−
தூமணிவண்ணன் சடுதியில் வந்தான்;−நான்
தூமலராய் அவன் சரண் புகுந்தேன்!
(சற்று நீளமாக எழுதியதற்கு உளமாற மன்னிப்பு வேண்டுகிறேன்)