​(ராமாயணம் − பகுதி −2)

(ஆரண்ய காண்டம்)
தண்டக வனத்தை அடைந்தனனே−

இண்டைக்குலத்தை கெடுத்தனனே;

வந்த அசுரர் கூட்டம் கொன்று,

வாழும் இடத்தையே, புனிதம் செய்தான்;

துஷ்ட விராதனன் கதை முடித்து,

கஷ்டங்கள் எல்லாம் துரத்தி விட்டான்;
ராமன் என்பது இவன் நாமம்!

ராமனும், சீதையும் நம் க்ஷேமம்!
சரபங்க, சுதீக்ஷ்ண முனிவர்களும்,

வரம் தரும் வள்ளலின், தாள் பணிந்தார்;

இகபர சுகம் தான் அடைந்திடவே,

அகத்திய முனிவரை, இவன் பணிந்தான்;

கழுகின் அரசன் வந்தங்கு,

காகுத்தன் சரண் புகுந்தானே; 

பழுதில்லாத பஞ்சவடி−

பார்வைக்கு இதமாய், இருந்ததுவே;

பர்ணசாலையை அங்கமைத்து−

பாங்காய் வாழ்வை கழித்தனனே;
ராமன் என்பது இவன் நாமம்!

ராமனும், சீதையும் நம் க்ஷேமம்!
காரார் மேனியில் ஆசை வைத்த,

சூர்ப்பனகாவை, விலக்கி வைத்தான்;

பாருக்கு சுமையாய் தாம் இருந்த,

கர தூஷணரை முடித்து நின்றான்;

மான் விழியாளும் மயங்கிடவே−பொய்

மான் ஒன்று அங்கே வந்ததுவே;

மானாய் வந்த மாரீசன்−

தானாய், பாணம் பட்டொழிந்தான்;

மருண்ட விழியாள் முகம் தேடி−இவன்

திரும்ப வந்தான், தன் இடமே!
ராமன் என்பது இவன் நாமம்!

ராமனும், சீதையும் நம் க்ஷேமம்!
சீதையை அங்கே காணாமல்,

பேதையாய் புலம்பினான், பெருமானே;

ஜானகி தேவியைக் காப்பாற்ற−

ஜடாயு, ஜன்மம் தொலைத்தானே;

ஈமக்கிரியையும் அவனுக்கு,

எம்பெருமானே செய்தானே!

காதலைக் கனியில் மறைத்து வைத்து,

கனிவாய் அளித்தாள், சபரியுமே;

கரியவன் அதையும் அமுது செய்து,

“பெரியது அன்பே!” என்றானே! 
ராமன் என்பது இவன் நாமம்!

ராமனும், சீதையும் நம் க்ஷேமம்!
அரக்கன் கபந்தன் புஜங்களையே,

அறுத்தே, நன்மையும் செய்தானே!
(கிஷ்கிந்தா காண்டம்)
அஞ்சனை மைந்தன் அனுமனுமே,

அரவிந்தன் அடியை பணிந்தனனே;

குரங்கினத் தலைவன், வாலியுமே,

கோமகன் கணைக்கு வீழ்ந்தனனே;

அவனது இளவல் சுக்ரீவன்−

அச்சம் ஒழிந்தான் அக்கணமே;

இனி எனக்கெல்லாம் உன் பதமே−

இதமாய் காத்திடும் என்றானே;
இலக்குவன் நிழலாய் தொடர்ந்திருந்தான்−

இலட்சியம் இவனே என்றிருந்தான்;

வலக்கரம் அவனே ஆனாலும், தன்−

வலக்கரம் பிடித்தவள் நினைவினிலே,

அஞ்சனை மைந்தன் அனுமனையே−

அரக்கன் தூதனாய் அனுப்பினனே!
ராமன் என்பது இவன் நாமம்!

ராமனும், சீதையும் நம் க்ஷேமம்!
(தொடரும்…)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s