​(ராமாயணம் − பகுதி −3)

(சுந்தர காண்டம்)
மூச்சிலும், பேச்சிலும் ராமனையே, 

முழு முதற் கடவுள் என்றவனின்,

பாதையில் வந்த தடைகளையே−

பக்குவமாய், அவன் போக்கினனே!

ஒவ்வொரு அணுவிலும், அவன் நாமம்−

உயிரிலும், உணர்விலும் உறைந்திருக்க,

மங்கை சீதையின் மனம் கவர்ந்த−

மணாளனாய், இவன் திகழ்ந்தனனே!
ராமன் என்பது இவன் நாமம்!

ராமனும், சீதையும் நம் க்ஷேமம்!
ஐயிரு சிரத்தோன் மதம் அறுக்க−

ஐயனும், அங்கே துடித்தனனே;

மெய்யன்புடைய மாருதியை,

மனத்துள் வைத்து மகிழ்ந்தனனே!

தேவி சீதை தாம் உரைத்த,

பாவியாம் காகா அசுரனது,

கதையை அனுமனும் எடுத்துரைக்க−

காகுத்தன் அங்கு கலங்கினனே!

அன்னையின் கூந்தல் அலங்கரித்த,

அழகு சூடாமணியினையே,

அண்ணலும் கண்டான், தனை மறந்தான்−

அவளின் வடிவம் எதிர் கண்டான்!
ராமன் என்பது இவன் நாமம்!

ராமனும், சீதையும் நம் க்ஷேமம்!
வாயுபுத்திரன் வார்த்தைகளின்

நேயத்தில், தனை மீட்டனனே!
(யுத்த காண்டம்)
அரக்கர் குலபதி ராவணனை,

அழித்திட அண்ணல் துணிந்தனனே;

வானவர் கூட்டம் சூழ்ந்திடவே,

தானும் பயணம் தொடங்கினனே!

சமுத்திர ராஜன் வழி விடவே,

சாதுவாய், அவனை வேண்டினனே;

இறுமாப்புடன் அவன் இருந்திடவே,

திருக்கரத்தில், வில் ஏந்தினனே!
ராமன் என்பது இவன் நாமம்!

ராமனும், சீதையும் நம் க்ஷேமம்!
சரணம் என்ற விபீடணனை,

வரணும் நீ என, ஏற்றனனே;

பரந்து விரிந்த கடலது மேல்−

பாறையால், பாலம் அமைத்தனனே!

கும்பகர்ணன் சிரம் கொய்தனனே,

கூட்டமாய் அரக்கரை அழித்தனனே!
ராமன் என்பது இவன் நாமம்!

ராமனும், சீதையும் நம் க்ஷேமம்!
மாருதியின் இரு கரங்களினால், 

மஹிராவணன் கதை முடித்தனனே;

போர்களம் கண்ட ராவணனை,

பொங்கிய கோபத்தில், அழித்தனனே!

அரனும், அயனும், தேவர்களும்−

அவனைப் போற்றி நின்றனரே;

நற்செயல் புரிந்த தன் மகனை−

பெற்றவனும், மிக வாழ்த்தினனே!
ராமன் என்பது இவன் நாமம்!

ராமனும், சீதையும் நம் க்ஷேமம்!
தேடிய செல்வம் கிடைத்தது போல், 

தேவியை, திருமகன் கண்டனனே;

தாளிணை சேர்ந்த விபீடணனை,

தானே, அரசனும் ஆக்கினனே!

பெருநகர் அயோத்தி சென்றிடவே−

புஷ்பக விமானம் ஏறினனே;

பரத்வாஜருடன், ரிஷிகளையும்−

பணிந்தே, ஆசியை, ஏற்றனனே!
ராமன் என்பது இவன் நாமம்!

ராமனும், சீதையும் நம் க்ஷேமம்!
துரும்பாய் இளைத்த பரதனுக்கு−

திரும்பி வந்துயிர் தந்தனனே;

அயோத்தி நகரின் அணிகலனாய்−

அவனும் அழகாய், இருந்தனனே!

எவ்வுயிரும் சமம் என்றனனே,

என் மக்கள் யாவரும் என்றனனே;

அவனுக்குப் பலவித ஆபரணம்−

அவனோ, அயோத்தி ஆபரணம்!
ராமன் என்பது இவன் நாமம்!

ராமனும், சீதையும் நம் க்ஷேமம்!
மக்கள் யாவரும் மனம் மகிழ,

மணிமுடி சூடி அமர்ந்தனனே;

மன்னர் குலத்தில் உதித்திட்ட−

மாணிக்கமாய், இவன் திகழ்ந்தனனே!

அரங்கனை, அன்பின் பரிசாக−

அரக்கர் தோன்றலுக்களித்தனனே;

ரவிகுல மேன்மை வானுயர−

அருளையே, வாரி வழங்கினனே!
ராமன் என்பது இவன் நாமம்!

ராமனும், சீதையும் நம் க்ஷேமம்!
உயிர்கள் யாவையும் தன் பேறாய்−

உத்தமன் காத்து நின்றனனே;

உலகம் யாவையும் தன் உறவாய்−

உயரிய குணத்தோன் கண்டனனே!
(தொடரும்…)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s