​(பகுதி − 2 − திருவடி அடைவாய் நன்னெஞ்சே….)

என் கலி தீர ஏத்துகின்றேன், என் பெருமானே!

முன் வினை முழுதுமாய் நீக்குவாய், முகுந்தா!

சென்மமும் தீர்ந்து, என் சிந்தையும் குளிர்ந்திடவே,

நன்மையாம் நின் திருவடி அடைவிப்பாய், நாரணா!                                                                 (14)
நாரணா! என் நந்த கோபாலனே!

பாரமான என் பழவினை வேரறுப்பாய்!

காரணா! கடலைக் கடைந்தானே!

ஆரெனெக்கு நின் பாதமே, சரணாகத் தந்தொழிந்தாய்!                                                    (15)
ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி−

வழுவிலா அடிமை செய்யவே விழைந்தேன்;

வழியும், நெறியும் நீயே காட்டு!

செழுநீர் பொழில் சூழ் தென் பொன் அரங்கா! (16)
அரங்கத்து அம்மானே! ஆழியங்கையனே!

அரவணைத் துயில் கொண்ட அரிதுயில் மாயனே!

கரதலம் சிரம் வைத்து, கலிதனை தீர்த்திடுவாய்−

நரகமும், சுவர்க்கமாக்கும், என்னை ஆளுடைய கோவே!                                                                      (17)
கோவே! குடந்தைக் கிடந்தானே!

நாவே கொண்டேன்−நின் புகழ் பாடவே;

வாவென அழைத்து, நின் திருமடி தாம் அமர்த்தி−

போவென என் பிழைகள் போக்கி, நீ பரிந்தருள்வாய்!                                                       (18)
அருள்வாய், ஆரா அமுதே, ஆநிரை மேய்ப்பனே!

தருவாய் நின் திருப்பதமே, யான் உய்ந்து போய்விடவே;

மருளும், மயர்வும் முழுதுமாய் தாம் நீக்கி−

கருமாணிக்கமே! என்னை நீ கடைத்தேற்று!     (19)
தேற்றிடுவாய் என்னை, தொல் வினையினின்று−

போற்றியே பணிகின்றேன், என் பரந்தாமனே!

சேற்றிடை சிக்குண்டு சீரழியும் என் வாழ்வு−இதை

ஆற்றிடை கிடக்கும் அரங்கா, நீ மாற்று!              (20)
மாற்றுவாய், எந்தன் வல்வினைகளையே−

தேற்றுவார் ஆரோ, உனையன்றி எனக்கு?

சாற்றும் மலர்களால், மனம் குளிரும் சாரங்கா−

ஆற்றுவாய், எந்தன் அருங்கலி தனையே!         (21)
தனையே உன் தாளிணைக் கீழ் தந்தேன்;

வினையேன் செய் பிழை, நீ பொறுத்தருள்வாய்!;

நினையே அன்றியும், இந்நானிலத்தே−

எனையே காத்திட, எவரோ உள்ளார்?                  (22)
உள்ளாரோ, யான் ஒத்த ஓர் கடும்பாவி?

இல்லாரோ என்பது ஏதும் அறியேன்;

கள்ளார் பொழில் சூழ் தென் திருவரங்கா!

எல்லாமும் மறந்து, எனை நீ கொள்வாய்!           (23)
கொள்ளுவாய் என்னை, என் வினை ஒழித்து−

தள்ளுவாய் எந்தன் தீமைகள் யாவையும்;

பள்ளம் பாயும் நீர் அது போல−

வெள்ளமாய் நின் அருள், என்னிடம் பெருக்கு! (24)
பெருக்குவாரின்றி, பெருகும் என் அண்ணலே!

சுருக்குவாரின்றி, சுருங்கும் என் செம்மலே!

தருக்கிலனாகிலும், தள்ளி நீ வையாது−

வருத்தங்கள் தீர்த்து, வாழ்விப்பாய் என்னையே!(25)
என்னையும் நோக்கி, என் இயல்வையும் நோக்கிய பின்னையும்,

என் பின்னை மணாளன்−

தன்னொப்பாரில்லா தனியப்பன் ஆனதால்−

எந்தன் முன் வினை அகற்றி, என்னையும் ஒரு பொருளாக்கி வைத்து−

தனதாள் நிழல் தயையுடன் ஈந்து, தளரப்பிப்பான்−

யான் உயர்வடையவே!                                           (26)
(உயர்வுடை நலம் நிறை எம் அண்ணல்−என்

மயர்வற மாயம் செய்த மாமாயன்;

செயற்கரியன செய்யும் வித்தகன்−அவன்

துயரறு சுடரடி தொழ விழை மனமே!! )
 (எம்பெருமானார் திருவடிகளே ஸரணம்…)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s