பசுத் தோல் புலியாக குணம் கொண்டேன் கோவிந்தா−
பார்வையால் பாவனமே செய்திடுவாய் பரந்தாமா!
சிசுவின் தவறுக்கெல்லாம், சீற்றமும் நீ கொள்ளலாமா?
சேய் எனை சினந்து நீயும், அருந்துயரில் தள்ளலாமா?
அசுர மனம் என்னை அணுஅணுவாய் வதைக்கிறதே;
அடியேன் அகப்பட்டேன்; ஆவியுமே கொதிக்கிறதே!
திசுவின் துகளெல்லாம் தாபம் என்னை எரிக்கிறதே;
தமியேன் ஏது செய்வேன், கலங்கி மனம் தவிக்கிறதே!
எனக்கென உருகும் உள்ளம், உன்னிடம் தான் இருக்கிறதே!
ஏழையின் விடுதலேயோ, உன் கரத்தில் அடங்கியதே!
உனக்கும் எனக்குமுள்ள உறவு, நம்மை பிணைக்கிறதே!
உதவிட நீ வருவாய், கடமை உன்னை அழைக்கிறதே!
அங்கு, அப்பொழுதே, தோன்றுவது உன் இயல்வல்லவா?
அடைக்கலம் வந்தவரை, தாங்குவது உன் அருளல்லவா?
இங்கு, இவ்விடமே, உன் முன்னே வந்தேனே!
இனி எல்லாம் நீ என்று, என்னையுமே தந்தேனே!
வாடிய என் நெஞ்சில், உன் கனிவைப் பொழிந்திடடா!
வேறொன்றும் வேண்டிலனே, எந்தாயே, வைகுந்தா!
நாடி நான் நயந்து வந்தேன், என் ப்ரபுவே, நரசிங்கா!
நானுனக்காகி விட்டேன், இனி உன் அணைப்பில் எனை வையடா!!