(கரம் கொடுப்பாய், நரஹரியே…..)

(ஶ்ரீ ஆதிஸங்கர பகவத் பாதாள் இயற்றிய, “ஶ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ கராவலம்ப ஸ்தோத்திரத்தை, கூடிய வரையில், மூலப் பொருளிலிருந்து விலகிச் செல்லாமல், தமிழ் படுத்தியிருக்கிறேன்.. பிழை இருப்பின், பெரியோர்கள், பொறுத்தருள, சிரம் தாழ்த்தி, ப்ரார்த்திக்கின்றேன். இது வருகிற, ந்ருஸிம்ஹ ஜெயந்திக்கு, அடியேனுடைய, “வாசிக கைங்கர்யமாக”  ஏற்றுக் கொண்டு, அனுக்ரஹிக்க வேண்டுமாய், விண்ணப்பித்துக் கொள்கிறேன்..)

அழகிய பாற்கடலில், அரிதுயில் கொள்ளும், ஆழியங்கையனே!

ஆதிசேடன் சிரம் அமைந்த, மணிகளின், ஒளி வடிவுடையோனே!.

அண்டிய அடியோரை, அழகாகக் காத்தருள்பவனே!

ஆழி இதனின்று, அடியேனை, கரம் தந்து காப்பாய், ஶ்ரீ ஆளரியே!      (1)
அயன், அரன், ஆதித்யன், இந்திர, மருதர்கள்−

அழகிய மணிமுடி பதிய வணங்கும், தாமரைப் பதத்தோனே!

அலர்மகள் திருமார்பாம் கமலத்தில், உறைகின்ற ராஜ ஹம்ஸமே!

அடியேனைக் கரம் கொடுத்துக் காப்பாய், ஶ்ரீ ஆளரியே!                    (2)
சம்சாரத் தீயில், யானோ, சறுக்கி விழுந்தேன்;

சஞ்சல ஜ்வாலைகள் சூழ, திகைத்தும் நின்றேன்;

சரணாகதன் உன், தண் திருவடிகள் நாடி வந்தேன்;

செடியாய வினையேனை, கரம் கொடுத்துக் காப்பாய், ஶ்ரீ ஆளரியே!         (3)
தூண்டிலில் வலியச் சிக்கிய, சிறு மச்சம் போல்−

தரணியில் அமைந்து, துன்பமே நானும் கண்டேன்;

தாங்கொணாத் துயரில், இன்று,  இங்கு வாடுகின்றேன்;

தமியேனை, கரம் கொடுத்துக் காப்பாய், ஶ்ரீ ஆளரியே!       (4)

 

பவமாம், இந்த பாழுங்கிணற்றில், விழுந்தேன்;

பல நூறு சர்ப்பங்கள், எனை  சூழ இருந்தேன்;

பரிதவிக்கும் எந்தன் நிலையைக் கண்டு−எனை

பாலிப்பாய், ஶ்ரீ ஆளரியே, கரமும் தந்து!        (5)
மதயானை வசம், இவ்வுடல் அகப்பட்டது போல்−

மண் மீது என் வாழ்க்கை, இன்று உளதே!

மேதினியின் துன்பங்கள், என் உயிரைச் சிதைக்கிறதே;

மாலோலனே, உன் கரம் கொடுத்து, அடியேனைக் காத்தருள்வாயே!       (6)
வலி மிக்க அரவமாக, வாழ்க்கை இன்று−

வாட்டியே வதைக்கிறதே, வாசுதேவா!

கலி மிகுந்து நலியும், இந்த கடையனுக்கு−

கருட வாஹன ஶ்ரீ ஆளரியே, கரம் கொடுப்பாய்!           (7)
பாபங்களை விதையாக இட்டு விட்டு,

பாவியேன் வந்தேன், இந்த பாரினுக்கே;

பழங்களாய் துன்பங்கள், தின்று வீழும்−எனை

பாலிப்பாய், கரம் தந்து, ஶ்ரீ ஆளரி நீயும்!         (8)
காலம் எனும் முதலையின் பிடியில் நானும்−

கதறியே அழுந்தினேன், எந்த நாளும்;

கண்டவர் மீது கொண்டேன், பந்த பாசம்;

கரமளித்து, ஶ்ரீ ஆளரியே, காத்திடு நீயும்!    (9)
பிறவிக் கடலில் மூழ்கியே, மயங்கினேனே;

பாமரன், எனைக் காக்க, வரணும் நீயே;

பக்தனாம், ப்ரகலாதன், துயரைத் துடைத்த−

பரந்தாமா, ஶ்ரீ ஆளரியே, கரம் அளிப்பாயே!   (10)
அச்சமே அளிக்கின்ற இந்த அவனி வாழ்வில்−

ஆறுதல் ஏதுமின்றி, அலைகின்றேனே;

அத்துணை துன்பத்தின் பிடியினின்றும்−

அத்தனே, ஶ்ரீ ஆளரியே, கரமளித்து, எனைக் காப்பாயே!  (11)
நமனுமோ, பாசக் கயிற்றில் எனைக் கட்டி இழுக்க,

நானுமோ, இங்கு, ஆசை வலை, அகப்பட்டு இருக்க,

நலிந்தே, தனியனாய், தவிக்கின்றேனே;

நயந்திடுவாய், ஶ்ரீ ஆளரியே, கரம் தந்து காப்பாய் நீயே!  (12)
திருமகள் துணைவா! அலர்மகள் மார்பா!

அருந்தவம் காப்பவா! அகிலமும் ஆனவா!

அரக்கனை அழித்தவா! அனைத்தும் என்றானவா!

அடியேனை, ஶ்ரீ ஆளரியே, கரமளித்துக் காப்பாயே!   (13)
சங்கமே ஒரு கரமும், சக்கரமே மறு கரமும்,

பங்கயத்தாள் இடை அணைத்த திருக்கரமும்,

பக்தர்களைப் பாலிப்பது ஒரு கரமுமாய் உடைய−

பரந்தாமா, ஶ்ரீ ஆளரியே, கரமளித்து எனைக் காப்பாயே!  (14)
ஐம்புலனில் எனை இழந்தேன்; அந்தகனும் நான் ஆனேன்;

அடங்காத ஆசைக் குகையினிலே, போய் வீழ்ந்தேன்;

அம்புயத்தாள் அருந்துணையே, அடைந்தேன் நின் திருவடியே!

அடியேனை, ஶ்ரீ ஆளரியே, கரம் தந்தென்றும் காப்பாயே!   (15)
ப்ரகலாத, வ்யாஸ, நாரத, பராசர, புண்டரீகன்

இதய கமலத்தில் நிலையாக, இனிது வசிப்பவனே!

பக்த பரிபாலனம், பரிவுடன் செய்யும் பரந்தாமா!

பாலிப்பாய், ஶ்ரீ ஆளரியே, அடியேனுக்கு, உன் கரம் தந்தே!   (16)
மது வண்டாய் மாறிய சங்கரனாம், அடியேனால்,

மாதவன், ஶ்ரீ ஆளரியின், தாமரைத் திருவடி மேல்,

மங்களமாய் சொன்ன துதி இதனை, மனமுவந்து கூறிடுவார்−

மற்ற தடை யாவுமின்றி, மங்களம் தாம் காண்பரே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s