(கர்ணனாய் ஆவேனா?…)
கருணை பெருகவே, கண்ணா நீயும், இந்த−
கர்ணனை, பகடையாய் ஆக்குவையோ?
வருத்தம் ஏதும் எனக்கு அதிலில்லை;
வரமாய் எதையும் ஏற்றிடுவேன்!
பெற்றவள் முகத்தினை மறைத்து வைத்து, என்−
மனதில் செந்தணல் மூட்டுவையோ?
உற்றது, உன்னால் அது தானென்று−
உள்ளமும் பொருந்திட, காட்டுவையோ?
வாது செய்திட வகையே இன்றி, பெரும்−
வஞ்சனையால், எனை போர்த்துவையோ?
சூத புத்திரனாய், எனை பேசவும் விட்டு−
சூத்திரதாரியாய், பார்த்திருப்பாயோ?
உடன் பிறந்தோரை பகைத்துக் கொண்டு, இந்த−
உயிரும் தரிக்கவே, விதி செய்வாயோ?
கடமையே, எனக்கு பெரிதென்று நீயும், கரம்−
கட்டிப்போட்டு, ஒரு மதி வைப்பாயோ?
பெற்றவளை, நீ ஏவி விட்டு, அந்த−
பஞ்சவர் உயிருக்கு உதவி செய்வாயோ?
மற்றிவனும் இங்கு உண்டென்று நீயும், ஏனோ−
மறந்தே என்னை, விலக்கி வைப்பாயோ?
வரத்தால், என்னை சிறையே பிடித்து, நல்−
வாழ்வும், அவருக்கு பரிந்தளிப்பாயோ?
கரத்தை நீயும் பிணைத்தே விட்டு, இந்த−
கர்ணனின் உயிரை, உவந்தெடுப்பாயோ?
தாய் அவள் மடியில் இவ்வுடலம்,
தனியாய் கிடக்கும், அவலம் செய்வாயோ?
தயையால், அதுவே, நீ தரும் பரிசோ? இந்த−
தரணியில், அதற்கும், எது பெயரோ?
கொடுத்துச் சிவந்த இந்த கைகளிலே, நீ
எடுத்துக் கொடுக்கும் பாதையிலே,
துடித்து நானும் பயணிப்பேன்; இனியும்−
தடுத்து ஆட்கொள்ள, ஏதும் தடை உளதோ??..