​(யாரேனும் ஆவேனே….)

(துரியனாய் ஆவேனா?….)
காந்தாரி புதல்வனாய், நானும் பிறந்திடுவேன்;

கண்ணா, உனை மறந்தே தான், செயல்படுவேன்;

ஆங்கார குணங்களைப் பேணி வளர்த்திடுவேன்;

ஆன்றோரை பணியவும், நான் மறுத்திடுவேன்!
பஞ்சவரைப் பகையாக நான் கொண்டிடுவேன்;

பாஞ்சாலி மானம், பங்கம் செய்திடுவேன்;

நெஞ்சையே நெருப்பாக்கி, வளர்ந்திடுவேன்;

நஞ்சினும் கொடுஞ் சொற்கள் உமிழ்ந்திடுவேன்!
சூதாட்ட விளையாட்டால், தந்திரம் செய்வேன்;

சொத்துக்கள் பணயமாக்கி, சங்கடம் செய்வேன்;

வாதாட முடியாமல், வாய் பூட்டியும் வைப்பேன்;

வஞ்சியை, வேசி என்று, நிந்தனை செய்வேன்!
வனவாசம் அவர் செல்ல நிர்பந்திப்பேன்;

வாழ அங்கும் விடாது, உயிர் வாதை செய்வேன்;

கணமேனும், சுகம் காண, நான் அனுமதியேன்;

காத்திருந்த பின்னாலும், காணி இடமும் தாரேன்!
பாகங்கள், அவருக்கே, நான் மறுத்திடுவேன்;

பாசங்கள், யாவையும் நன்கு அறுத்திடுவேன்;

மோகமே, மண் மீது கொண்டிடுவேன்;

போகங்கள் எல்லாமும், எனது என்றிடுவேன்!
தூதென்று நீ வந்தால், கொக்கரிப்பேன்;

ஏதுமே ஈயேன் என இயம்பி நிற்பேன்;

வாது நீ செய்தாலும், வளையாதிருப்பேன்;

ஏதங்கள் மென்மேலும் புரிந்தே இருப்பேன்!
ஆர் என்ன சொன்னாலும், செவியும் கொடேன்;

போர் என்று வந்தாலும், துளியும் விடேன்;

படை வேண்டி, உன்னிடமே வந்து நின்றாலும், 

பவ்யத்தை உனக்காக்கி, தாளில் விழேன்!
அதர்மத்தால், அடித்தென்னை, சாய்த்திட்டாலும்,

ஆணவமாய், உன்னிடமே, நியாயம் கேட்பேன்;

அநியாயம் அத்தனையும் என் பக்கல் என்று−

அரவிந்தன் நீ காட்ட, அடங்கி நிற்பேன்!
தருமமே வெல்லும் என்று தெளிந்திடுவேன்;

தருமத்தின் உருவாய், உனை உணர்ந்திடுவேன்;

கருமத்தால்,  செய்த என் கலிகள் எல்லாம்−என்

கண்ணீரால், உன் மலரடியில், கரைத்தே மீள்வேன்!!
தாளிணைகள் அருகிருக்க, நான், தரம் தாழலாமோ?

தலைவனாய் உனை வரிக்க, மனம் மறுக்கலாமோ?

தனக்கென்று, மறு முறையாய், ஒன்று கேட்டிடலாமோ?

தடத்தாமரை சிரம் அமைத்து, எனை ஏற்றிடலாமோ?……

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s