யாமெல்லாம் உன் பொம்மை தானே−
வாமனக் கண்ணக் குட்டா;
கோமளச் சிறு வாய் குவித்து−
எமக்காக என்ன கணக்கோ?
வேதமே கீதை வைத்து,
நாதன் நீ சொன்னதெல்லாம்,
பாதையை விலகி ஓடும்−
பேதையர் எமக்கு என்றால்,
ஞானம் ஏன் குறைத்து வைத்தாய்?
ஞாலத்தில் உழல வைத்தாய்?
நியாயம் உன் பக்கல் எங்கே?
நாங்களும் செல்வதெங்கே?
உன்னையே அறியும் ஞானம்,
உள்ளவாறு எமக்கு இல்லை;
தன்னையே தாளிணைக் கீழே−
தரவும், யாம் அறியவில்லை!
ஏதங்களாலே நிறைந்தோம்,
எம்பிரான் உன்னைத் துறந்தோம்;
நாதன் நீ, நயந்து நோக்க−
நசியாதோ, அவைகள் எல்லாம்?
சேய்களாய் யாமும் செய்யும்,
சேரொண்ணா செயல்கள் யாவும்−
தாய் உந்தன் தயையினாலே,
தானாக நேர் படாதோ?
வாதம் செய்ய, யாம் வரவில்லை;
வரம்புகள் மீறாமலே, வாழவும் தெரியவில்லை;
வாடினோம், வாடினோம் யாம்−
உனக்கும் ஏன், அது புரியவில்லை?
போதுமே, இந்த பொம்மை விளையாட்டு;
தாதையாய், ஒரு வழியும் காட்டு;
பரிவதை எம் மேல் கூட்டு; உன்−
பதகமலம் சிரமே சூட்டு!!