​(ஒரு புல்லாங்குழல் பேசுகிறது…)

மரத்தின் ஓர் அங்கமாக−

மயங்கியே நான் வாழ்ந்திருந்தேன்;

மாதவம் ஏதும் செய்தேனில்லை;

மாதவன் பேரை, மறந்துமே மொழிந்ததில்லை!
விண்ணவர் கோன், விரும்பி மீட்ட−ஒரு

வேங்குழல் வேண்டி வந்தார்;

அன்னவர்க்கு என்னைத் தரவே−

அடியேனும், அகம் மகிழ்ந்தேன்!
வெட்டிப் பிரித்தனர் என்னை;

வேதனை முழுங்கி நின்றேன்;

வடிவமாய், எனைக் கொணரும் முன்னே−

விதவிதமாய் அனுபவமே என்னே!
சீவி, சிதைத்தனர் கொஞ்சம்;

செதுக்கித் திருத்தினர் கொஞ்சம்;

சின்னத் துளைகளுமிட்டு,

சோதனை செய்தனர் கொஞ்சம்!
அத்தனை துன்பமும் தாங்க,

அரவிந்தனை, துணைக்கழைத்தேன்;

ஆனால், இது என்ன விந்தை!

அவன் தீண்டுதலில் இத்தனை சுகமா?
கரத்தால், என் மேனி தடவ−

வரமாகிப் போனதென் வாழ்வு;

அதரத்தை, என் மீது பதித்தான்;

அதில் நானும், கிறங்கிப் போனேன்!
மூச்சுக் காற்றை, மருந்தாய் தடவ,

மறு ஜென்மம் எடுத்து நின்றேன்!

மதுரமாய், குரலும் தந்தான்; இந்த−

மண்ணுள்ளார், மயங்கவும் செய்தான்!
சொல்லொணா இன்பம்  கண்டேன்;

சுவர்க்கமும் அங்கு கண்டேன்;

சஞ்சலம் கரைந்து போக, 

சகலமும் அவனில் கண்டேன்!
மாது அவளும் பெற்றறியாத,

மன்மத போகம் கொண்டேன்;

மது சுவை அதரம் கிடைக்க,

மற்றுளார் அசூயை கொண்டேன்!
ஈதெல்லாம் யானும் பெறவே,

என்னத் தவமே செய்து விட்டேன்?

ஏதும் நான் அறிந்திலனே, 

எனைத் தந்தது ஒன்றே செய்தேன்!
இது தான், எதிர் பார்த்திருந்தானோ?

இத்தனை நாள் மறுத்திருந்தேனே;

இனி ஏதும், எனதென்றில்லை,

இசைந்தானேன், அவன் கைப்பாவை!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s