​(ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்தில், பூதனை…)

அன்னையாய், அரவிந்தனுக்கு, 

அமுதம் தரவே நினைத்தேன்;

அதற்கொரு தவம் செய்யாமல், 

அடியேனோ, அலைந்திருந்தேன்!
ஆசையோ, வெட்கமறியாது;

அதற்கொரு எல்லையும் ஏது?

அணுவிலும் இருப்பவன் தானே?

அவன் அறியானோ, என் மனமே!
அனுட்டானம் ஏதுமில்லை;

அவன் புகழ் பாடவில்லை;

ஆயினும், என் ஆசைத் தீயோ, 

அணுவளவும் குறையவில்லை!
பின்னொரு நாள் சொல்லி நின்றேன்;

பெண்மையை பெருமை படுத்தென்று;

அண்ணலும், கேட்டு நின்றான்;

அதற்கென்ன, தந்தேன் என்றான்!
அரக்கனின் ஆளுமையின் கீழ்−

அடியேனை அனுப்பி வைத்தான்;

அந்த அவுணனால் ஏவப்பட்டு, 

அன்னையாய் மாறி வந்தேன்!
தனங்களில் நஞ்சை ஏந்தி,

தாமோதரனுக்கு, அளிக்கச் சொன்னான்;

பிணமாக அவனை ஆக்கி, எனை−

பிழைக்க வை என்றும் சொன்னான்!
அண்ணலை மடியில் ஏந்த,

ஆர்வமே கொண்ட யானும்−

வாய்ப்பொன்று வந்ததென்று, அவன்−

வாசலே, வந்து நின்றேன்!
“தாய்மையே வெல்லும்” என்று−

தாரக மந்திரம் சொல்லி, 

தனயனாய் மடியும் கிடத்தி−

தகாத காரியம் செய்தேன்!
தாயென்று நினைத்ததனாலே, 

ஆயர் குலக்கொழுந்து, தானும்−

மாயமே செய்து என்னை−

“போயிற்று உன் சாபம்” என்றான்!
உதரம் தராத தாய் எனக்கு, தன்−

அதரத்தாலே, ஆறுதல் தந்தான்;

தமியேன் என்னையும் தாயாக வரித்து,

தனயனாக, தன் கடமையே செய்தான்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s