​(பழம் வேணுமா, பரந்தாமா?….)

ததிபாண்டன் என்ன உனக்கு−

தாயாதியா, இல்லை, 

திருநாமமே நவிலும் ஒரு−

தவமுனியா?
வரும் பிறவி இனியில்லை என,

வரமும் அன்று தந்தாயே; பின்−

வலிய வைகுந்தமும் ஈந்து, அவனை−

பொலியவும் செய்தாயே!
பரிந்தொரு பழம் தரவே,

பரந்தாமா, கேட்கின்றாய்;

பல விதமாய் பழம் கேட்டு,

பல கதையும் சொல்கின்றாய்!
வழித்துணையாய் வருவதற்கு,

வாழைப்பழம் கேட்கின்றாய்;

வைகுந்தம் பெறுவதற்கே,

வாங்கி அதை வைத்திருக்கேன்!
பல காரியம் செய்பவற்கு,

பலாப்பழம் தருவதற்கில்லை;

பரமபதம் தருபவர்க்கே−

பதுக்கி அதை வைத்திருக்கேன்!
மாளிகையின் மங்கலத்திற்கு, 

மாங்கனி, விலை பேசுகிறாய்;

மறு ஜென்மம் தொலைப்பவனுக்கு,

மறைத்து அதை வைத்திருக்கேன்!
தருணத்திலே ஒத்துழைக்க−

திராட்சையா கேட்கின்றாய்?

அருள் கொடுக்கும் அண்ணலுக்கு,

அதை, எடுத்து  வைத்திருக்கேன்!
நாளெல்லாம் உழைத்திடவே,

நாவல்பழம் வேண்டுகிறாய்;

நலிவெல்லாம் நசிப்பவனுக்கு, 

நானும், அதை வைத்திருக்கேன்!
பிழைகளை மறப்பதற்கு,

புளிப்பழமும் கை மாறோ?

விழைந்தென்னை மீட்பவனுக்கு,

வெறும் கையைத் தரலாமோ?
இன்னலைக் களைந்திடவே,

இலந்தைப் பழம் உனக்காமோ?

இணையடியில் இணைப்பவனுக்கு,

இல்லை எதுவும் எனலாமோ?
என் கரத்தால் பழம் பெறவே,

எனக்கும் நீ உதவணுமே;

ஏன், எதற்கென வினவாமல்,

ஏழைக்கு நீ அருளணுமே!
அடியேனின் இச்சையெல்லாம்,

அகமகிழ்ந்து நிறைவேற்று;

அத்தனை பழத்தொடும், 

இந்த கூடையுமே, உனக்காச்சு!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s