உன் நினைவென்னை மீட்டுதடா;
ஒவ்வொரு நாளையும் இயக்குதடா;
உள்ளம் இதுவோ, உன் வருகையையே,
உரசும் காற்றிலும் எதிர்பார்க்குதடா!
இளங்காலையில் வருவாய் நீ என்றே
இமையும் மூடாதிருந்தேனே;
இல்லை என்றதுவும் ஆன பின்னே
இனிய மாலைக்கு காத்தும் இருந்தேனே!
அந்தியும் மயங்கி, இரவும் வந்தது;
அண்ணல் நீ வரக் காணேனே;
சந்திக்க விழைந்த விழிகளிரண்டில்,
சிந்தும் கண்ணீர் கண்டேனே!
பெண்ணிண் வருத்தம் அறியாயோ?
பிரிவின் வாட்டமும் தெரியாதோ?
பேதை என் வாதைகள் நீக்காயோ?
கோதையை உன்னுடன் சேர்க்காயோ?
காதலைப் பொழியும் கன்னியின் மேல்−நீ
கருணையை பொழிந்தால் ஆகாதோ?
கலங்கி நிற்கும் இதயத்தையே−
கொஞ்சம் கனிவால் காத்தால் ஆகாதோ?
ஆருயிர் நிலைப்பதும், நீங்குவதும்−
அண்ணலின் அன்பில் தானிருக்கு;
அபலை இவளது வருங்காலம்
அனைத்தும், உன் கையில் தானிருக்கு!