புல்லாய் இருந்திருந்தால், உன்−
பொன்னடி பட்டிருக்கும்;
புள்ளாய் இருந்திருந்தால், உன்−
பொற்கரம் தொட்டிருக்கும்;
கல்லாய் சமைந்திருந்தால்,
கழலடி காத்திருக்கும்;
சொல்லாய் சிறந்திருந்தால், உன்−
சீர்மை பேசி, திளைத்திருக்கும்!
இல்லாத பேறுடையேன்;
இணையடியும் தொழுதறியேன்;
சொல்லாத நாமமதால், நின்
சொந்தமதை இழந்து விட்டேன்;
எல்லாமும் ஏதங்களாய்,
ஏழை நான் செய்தாலும்,
தள்ளாதே, அம்மானே,
தனயனையே காப்பாய் நீ!
கள்ளமெல்லாம் மனதிலே,
கடன் சுமையாய் அதிகரிக்க,
வெள்ளமாய் சம்சாரமும், எனை−
வண் பிடியில் வைத்திருக்க,
செல்லாத காசாக,
சன்மம் இதும் கரைந்திருக்க,
வெல்லாத வாழ்வென்னை, (திவம்)
வஞ்சித்தும் போனதுவே!
உள்ளூறும் என் எண்ணமெல்லாம்
ஊமத்தையாய் இருந்தாலும்,
சொல்கின்ற சொற்களெல்லாம்
சுடுநீராய் இருந்தாலும்,
எள்ளி எனை இகழாதே, எங்கே யான் போவேனே?
புள்ளேறும் பரம் புருடா, நீ
பரிந்தால், யான் வாழ்வேனே!!