(சமீபத்திய ஒரு நிகழ்வின் பாதிப்பு… கொஞ்சம் யோசிக்க வைத்தது.. அதனை, தங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்..)
தவிட்டுக்கு வாங்கினேனடா−என் தங்க மகனே, உன்னை!−என்று,
உதட்டளவில் ஒரு பொய்யைச் சொன்னாலும்,
ஓடி வந்து இறுக அணைக்கும், அந்த ஒரு நொடியில்−
அவளின் அன்பை முழுதுமாய், என்னால், உணர முடிந்தது!
தேர்வுகள் எனக்கா, இல்லை, என் அருமை அன்னைக்கா?−என்று
தெரியாமல் நான் தடுமாறிய கணங்கள் ஏராளம், ஏராளம்!
அரைப்பட்டினி, குறைத் தூக்கம் என்று எனக்காக−
தன்னைச் செதுக்கிக் கொண்ட−அவள், என் வாழ்வின் பூபாளம்!
அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைக்க வேண்டுமென்று−
அம்மனுக்கு வேப்பிலையில் சேலை கட்டி விரதம் இருந்தாள், என் அம்மா!
அம்மனும் செவி சாய்த்தாள், நான் அமெரிக்கா, பயணம் ஆனேன்;−ஆனால், என்ன இது,
அம்மாவின் கண்களில் எங்கிருந்து வந்தது, அந்த நயாகரா நீர்வீழ்ச்சி?
“தனியாகத் தவிக்கிறாயே” என்று சொல்லிச் சொல்லியே−ஒரு
துணையை, எனக்கென்று கூட்டி வைத்தாள்!−அதன் பிறகு,
தனியாக இருந்த நான், குடும்பம், குழந்தைகள் என்று ஒரு தோப்பாக மாறினேன்!
தனிமரமாக, என் அம்மா, மட்டும், எப்பொழுது உருமாறினாள்?
ஒரே ஒரு முறை வந்து, உன் முகத்தைக் காண்பிக்கக் கூடாதா? என்று அவள்
உருகிய போதெல்லாம், ஓராயிரம் வேலைகள், என்னைத் துரத்திக் கொண்டு வந்தன!
“பார்க்கலாம் அம்மா!” என்று சொல்லிச் சொல்லியே−
பத்து வருஷங்களைச் சுலபமாக ஓட்டி விட்டேன்!
“பேரப் பிள்ளைகள் முகம் கூடத் தெரியாதே, நீ,
பேருபகாரமாக, ஒரு முறையாவது, வந்து போ அப்பா!” என்றாள்;
நேரம், காலம் பார்த்து, நான் கிளம்ப நிச்சயித்திருந்தேன்;−ஆனால்,
பேரிடியாய், அவள் மறைந்த சேதி, அதை முந்தி விட்டிருந்தது!
கொள்ளி கூட போட முடியாத என் அவலம்−
தள்ளியிருக்கிறேன் என்பது, அம்மாவுக்குப் புரியும்;
என்றும், எதற்கும் என்னை எதிர்பார்க்காத என் அம்மா−
இன்றும், அப்படியே, கிளம்பியே, போய்விட்டாள்!
ஆனால் திடீரென்று−
என் தோப்பில், நான் மட்டும், தனியாக விடப்பட்டேன்;
சின்னதாய் கண்கள் கலங்கி, பின் வெள்ளமாய், பெருக்கெடுத்தது;
அம்மாவின் மடி தேடி, ஒரு அனாதை மனம், அழுது, அமர்க்களம் செய்தது!
அவள் வருவாளா?
“தவிட்டுக்கு வாங்கினேனடா, என் தங்க மகனே உன்னை” என்று
ஒரு முறையாவது, என்னைப் பார்த்து,
இனி சொல்வாளா?……