இருளில் தவிக்கும் யாம் உன்னை−
ஒரு ஒளியின் நிலையாய் உணரவில்லை;
மருளும், மயர்வும் மனத்திருந்து−
மாயோன் உனை, முன் நிறுத்தவில்லை!
கருணைக் கொண்டெமை தேற்றிடவோ, எம்−
கலித்தொகையோ, உனை, விடவுமில்லை;
அருளை நினைத்தே அழுதிடவோ, எம்
ஆசான் அனுக்ரஹம் கிடைக்கவில்லை!
கருவறை இருளும், புறவுலகிருளும்,
கற்கண்டு சுவையாய் பிடித்திருக்க−
பெரும் பதம் உளதென மறந்தொழிந்து,
போயும் வந்தும் இங்கமையும்−
கரும வினையின் கன்றுகளாம்,
எமக்கு−
ஒரு கரம் அபயமென அளித்து,
இரு கழல் விடியல் என விளக்கி, நீ−
தரும் சுகம் பெறு நாள் என்று கொலோ?
யாம்−
அரும் பேறடைவதும் என்று கொலோ?…