(இன்றிலிருந்து ஊடல் கொண்டிருக்கும் ராதையின் பின்னே கண்ணன் செல்கின்றான்…)
கண்ணின் மணியே, கோபம் ஏனடி?−
எனக்கோ புரியலையே…உன்−
கண்ணில் வழியும் நீரின்
காரணம், கண்ணன் அறியலையே….
அழகிய வதனம், அனலை பொழிய−
அவசியம் என்னடியோ?
பழகிய நாட்களை, பாவையும் மறந்த−
பாவமும் ஏனடியோ?
உன் இரு விழியால், என்னை விரட்டினால்,
என் மனம் தாங்கலையே;
என் இரு கரமும், அணைக்கத் துடிக்குதே,
நான் உனை நீங்கலையே!
என் விழி வழியும் காதலும் கூட,
உனக்குப் புரியலையே;
என் நான் செய்தால், எனை நீ ஏற்பாய்,
எனக்கது தெரியலையே!
தேடியே வந்தேன், தேவியே உன்னை,
தேவையும் அறியாயோ?
நாடியே வந்த நந்த குமாரனின்
நெஞ்சமும் புரியாதோ?
எத்தனை ஆசைகள் என்னைத் துரத்த,
உன்னிடம் வந்தேனடி;
அத்தனையும் நீ அறியாதிருந்தால்,
ஆரிடம் சொல்வேனடி?
எந்தன் ஜீவனை, உன்னில் ஒளித்தேன்−
உனக்கது தெரியுமேடி;
உந்தன் காதலில், உயிருமே வளர்த்தேன்−
உண்மையை மறந்தாயேடி!
சொந்தமும், பந்தமும் நீயே என்றேன்−
சோதிக்கத் துணிந்தாயேடி;
சொர்க்கம் எனக்குன் காலடி தானே−
சேர்த்துக் கொள், பணிவேனடி!!