​(நவராத்திரி… சுபராத்திரி….)

தேவியர் மூவரும் தேடி வந்து,

திருவருள் பொழியும் நேரமிது;

மேவிய வல்வினை மாள வைத்து,

மங்கலம் சேர்க்கும் வேளையிது!
அழகியர் மூவரும் அமர்ந்திடவே,

அகங்களை ஒளிர வைத்திடுவோம்;

பழகிய இடமாய் அவருணர,

பாங்குடன் சீரும் செய்திடுவோம்!
மனத்தினில் ஒளிந்த மாசகற்றி,

முதல் படியதுவும் அமைத்திடுவோம்;

இரங்கிடும் உள்ளம், அதுவே தான், 

இருக்கட்டுமே, இங்கு அடுத்த படி!
மற்றவர் மேன்மைக்கு மகிழ்வதுமே,

மூன்றாம் படியாய் ஆகட்டுமே!

நாவால் தீங்கும் இழைக்காமல்,

நான்காம் படியும் ஒளிரட்டுமே!
அசூயை எனும் அழுக்ககற்றி,

ஐந்தாம் படியை பொருத்திடுவோம்;

அன்பால் வாழ்வை நிறைத்து, நாமும்,

ஆறாம் படியை நிறுத்திடுவோம்!
எளிமை என்னும் உயர் நலத்தால்,

ஏழாம் படியை நாட்டிடுவோம்;

எத்துயர் வரினும், இறை விலகேன், என

எட்டாம் படியால் காட்டிடுவோம்!
ஒன்பது துளை உடல் நிலையாமை,

ஒன்பதாம் படியால் உணர்ந்திடுவோம்!

ஒன்பது நாளும், ஒரு நலமாய்,

ஒவ்வொன்றாகச் சேர்த்திடுவோம்!
மலைமகள் மகிழ்ந்திட இது போதும்;

அலைமகள் அமர்ந்திட இது போதும்;

கலைமகள் கனிந்திட இது போதும்;

தேவியர் அருள், இனி பெருக்கோடும்!!
பொம்மை முகங்கள் தொலைத்திடுவோம்;

உண்மையின் தரிசனம் கண்டிடுவோம்;

இம்மையில் வாழ்வை நேர் செய்து,

இறைமையை, அணுவிலும்

அனுபவிப்போம்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s