மதியும் மயங்குதடா, மாதவா; என்
மனமும் கிறங்குதடா;
பதி நீயேயென, ஒரு
பக்ஷி காதில் சொல்லுதடா!
வதனமது சந்த்ர பிம்பமாய்,
வஞ்சியை, உருக வைக்குதடா;
வாய் மூடி, வார்த்தையின்றி,
உனையே கண்டிருக்கச் சொல்லுதடா!
நான் வந்த காரணத்தின்
நினைவும் அழிந்தே போனதடா;
வான்மேகம் கண்ட மயிலாய்,
வனிதையும், மாறி நின்றேனடா!
கண்களைத் திருடிக் கொண்டு, எனக்கு−
காட்சியைக் கொடுத்தாயடா;
பெண் எனை கொள்ளைக் கொண்டு, ஏனோ−
பித்தேற வைத்தாயடா!
நாணம் தொலைத்தேனடா, நானும்,
நாதன் உனக்கானேனடா;
நீ இதை உணர்ந்தாயோடா? என்−
நிலையுமே அறிந்தாயோடா?
என்னைத் தந்து விடு, இல்லையேல்,
உன்னில் ஒளித்து விடு;
மன்னித்து நானிருப்பேன், நீயும்−
மங்கை என் மனதறிந்தால்!