​(7) மான்ஸரோவர்…

கண்ணன்:−
ஆசைப் பட்டது அவரென்றால், இதில்−

அடியேன் தவறும், ஏதடியே? உன்−

அகமும் அறியும்; ஜகமும் அறியும்−இந்த

ஆயனின் காதலி நீயடியே!
வானத்து நிலவு நீயென்றால்,

வெறும் விண்மீன் கூட்டம் அவரன்றோ?

ஏனடி என்னை அறியாதவள் போல்,

உனக்கீடாய் அவரை பேசுகிறாய்!
ராதை:−
பாலைப் பருகினேன், பனை மரம் கீழென,

பாங்காய் கதையே பேசுகிறாய்;

பார்ப்பவர் கண்ணில் மண்ணைத் தூவி,

பேதை நானென ஏசுகிறாய்!
நாலும், ஆறும், எட்டுமாய் பெண்கள்,

நயந்துன்னை சூழ்வது எதனாலே?

நூலும் நுழைந்திட வாய்ப்பும் ஏது−

நம் கை ஊசி,  இடம் மறுத்தாலே?
கண்ணன்:−
பத்து பெண்கள் சூழ்ந்து நின்றாலே−

ஒத்தனாய், நானென்ன செய்வேனடி?

பித்தம் அவர்க்கு, பேதமை அவர்க்கு−

மொத்த பழியோ, என் மேலடி!
சித்தத்தில் இருப்பது நீயே என்று,

எத்தனை முறை நான் சொல்வேனடி?

பித்தனாய் உன் பின் திரிந்த காலம்,

அத்தனையும் நீ மறந்தாயோடி?
ராதை:−
உண்மை அன்பு உனக்கென் மேல் இருந்தால், 

ஊரார் உன்னை நெருங்குவரோ? என்

பெண்மையை கேலிக்கூத்தும் ஆக்க,

பாவையர் கூட்டமும் புறப்படுமோ?
கண்ணன்:−
உன்னைத் தவிர, வேறோர் உயிர் மேல்−

உள்ளமும் எனக்கு செல்லுமோடி?

என்னை விட்டு நீயும் நீங்கினால்,

உன் நினைவே என்னைக் கொல்லுமேடி!
ராதை:−
வார்த்தை ஜாலம் ஒன்றே போதும்−

வஞ்சியை நீ சிறை பிடிப்பாயடா;

வாக்கும், மனதும் வேறென இயங்கும்−

வைகுந்தன் உன்னை நான் அறிவேனடா!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s