(திருவடி அந்தாதி..)

(பகுதி−1)

அண்ணல் அடியிணை ஏத்தியே,
அந்தாதி பாடவோர் ஆசையும்,
திண்ணம் அவனே தந்தான்−
தமியேன் வாக்கிலும், தானுவந்தே வந்தான்!

உயர்வுடை நலம் யாவும் நிறைந்த என் அண்ணல்−என்
மயர்வற மாயம் செய்த மாமாயன்;
செயற்கரிய செய்யும் வித்தகன்−அவன்
துயரறு சுடரடி தொழ விழை மனமே!
(1)

மனமே! உண்டியும், உடையும் மற்ற
யாவையும்−
தினமே தேடியே தொலைத்தனை பொழுதே!
கணமே இனியும் காத்திராமலே−
இனமே கண்டு நீ, இணைத்தாள் அடைவாய்!
(2)

அடைவாய் இன்றே, அரங்கத்துள்ளானை;
தடையே தகர்ப்பாய், அவனின் தயையால்!
சடையனும் இந்திரனும் தொழுத
அவ்வடிகள்−பற்றி,
விடையே பெறுவாய், இப்புவியினின்று!
(3)

இன்றைய பொழுதே, இணையடி தொழுவாய்!
என்றும், உனக்கு உறுதுணை அவையே!
கன்று மேய்த்த அக்கண்ணபிரான் கழலிணை−
சென்று சேரவே, சிந்தையில் துணிவாய்!
(4)

வாயில் அன்று வையம் காட்டி−ஓர்
மாயம் செய்த அந்த மதுசூதனன்−
சேயேன் என்னையும் தன்மடி தாங்கி,
தாயாய் அன்பைப் பொழியவும் கூடுமே!
(5)

கூடுமே என்னுயிர், கோலபிரான் அடியரொடு;
வாடுமே, அவரில்லா வாணாளின் போதுகளில்!
பாடுமே, என் நாவும் பரமனையே பல்லாண்டு!
நாடுமே என் நெஞ்சம், நாரணனின் தாளிணைகள்!
(6)

இணைகளை இறுகப் பற்றவே, என் இறையோன்,
பிணைகளைப் போக்கி, எனைப் பக்கமே கொள்வான்;
வினைகளை வேரொடு மாய்த்து−என்றும் நல்
துணையாய் வருவான், தாமோதரனே!
(7)

தரவே துடிப்பான், தன் அருள் வாரி;
கரமே இயம்பும், “அபயம்” என்றொரு சொல்!
“பரமே” என்று அவனைப் பற்றிட−
வரமே வாழ்வாகும், வரதனவன் தயையால்!
(8)

ஆலிலை அழகனின் அடிகளை வருடும்−அந்த
பால் கடல் செய்த பாக்கியம் முழுதும்−
மாலவன், மாதவன் மனமே இரங்கி−இக்
காலிடை தூசுமொப்பா, எனக்கே அருள்வனோ?
(9)

அருள்வனோ அழகன், அரங்கன் எனக்கே?
பெறுவனோ பெரும் பேறு, பேதை யானும்?
கரு மாணிக்கம், என் கமலக்கண்ணன்−
தருவனோ தனது தாளிணை நிழலே?
(10)

நிழலாம் அவனின் தாளிணை மறந்து−
விழலுக்கு நீராய், போயின பல பொழுது!
பழுதே வாணாள் முழுதுமே போக்கி−
விழுதாம் உன் இணை, பற்றவும் இலனே!
(11)

இலன், உளன் என யாவரும் மயங்கிட−
“உளன் யான்” என உறுதியாய் கூறி,
மலமும், மயர்வும் என் மனத்தகற்றி−
நலமாய் நெஞ்சில், நீ குடிபுகுவையோ?
(12)

குடிபுகுவையோ என் நெஞ்சில் குணசேகரா?−
கடிபொழில் சூழ் என் கண்ணபுரத்தானே!
வடிவுடைமார்பா! வேங்கடத்தமர்ந்தாய்!
விடிவெள்ளியாய் வருவாயே, என் கலி தீரவே!
(13)

(திருவடி மலரும்…)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s