என் நா வருடும்,
நின் நாமம்;
நயந்துன்னை
என் பா வருடும், பல விதமாய்;
என் கரம் பறிக்கும்
பூ வருடும், நின் திருமேனி;
என் சிரம் வருடுவதென்று,
உன் செவ்வடியே?
கலியெல்லாம் எனை வருட,
கருப்பையில் போய் வீழ்ந்தேன்;
சலித்ததடா, எல்லாமும்;
சடுதியில் நீ வந்திடடா!
ஆ வருடும் அடியிணையில்,
ஆவாவென எனக்கருளும்,
அந்நாளும் எந்நாளோ?
அடியேனுக்குச் சொல்லாயோ?
சேயின் அழுகுரலும், உன்−
சிந்தையை வருடிடுமோ?
தாயின் தவிப்போடு, எனைத்
தாங்கிடும் நாள் வருமோ?
பூ வருடும் மாதரசி,
பரிந்தாலே, நீ அருள்வாயோ?
போகட்டும் பாவமென்று,
பதமலரிலும், அன்று இடுவாயோ?