(ஶ்ரீக்ருஷ்ண யாத்ரா − 1)

(மதுராவில் அடியேன் மனநிலை..)

கிட்ட நெருங்கும் முன்னமே−
கலியின் கொடுமை தெரிந்ததே;
பட்ட கொடுமை உன் அன்னைதந்தை−
பார்த்தவுடன் புரிந்ததே!

எட்டவொணா உயரத்தில்
எத்தனையோ பெருஞ்சுவர்கள்−
சுட்டவடுவாய் சரித்திரத்தை,
செவியோரம் சொன்னதே!

பத்து மாதம் சுமந்திருந்து,
முத்துப் போல மகவீந்து−
பெத்தவளாய் பேறு காண,
யத்தனித்த திருவயிற்றின்−

ஏமாற்றம் சொன்னதே;
என் மனமும் கனத்ததே;
ஏன் மாற்றம் இன்னுமில்லை,
என்றுன் தாயும் தவித்தாளோ?

வெட்டி வீணர் எறியவே−
உட்புகுந்த அண்ணலே!
கட்கிலியே, கண்ணனே−
காணுமாறு கனிந்தாயே!

ஏழு பிள்ளை யமனுக்கீந்து−
எழும் கண்ணீர், பாலாய் சேர்ந்து,
அழுது அமைந்த அன்னையை−
வழு நீக்கவே வந்தாயோ?

தேவகியின் திருவுதரம்−
தாங்கியதோ தீர்த்தனை?
பாவக்கணக்கு கழித்துவிட−
பெற்றதோ, அந்த பாலனை?

காவல் வைத்த காவலரும்−
கடமை மறக்க வைத்தாயோ?
ஆவல் மேலிடுகிறதே, நீ−
அதிசயங்களின் அணிவகுப்போ?

பாற்கடலின் இடையிலே−
பள்ளி கொள்ளும் அண்ணலே!
யார் கண்ணும் காணாதே−
இருளெனும் பெருஞ்சிறையே−நீ

வந்ததேனோ வைகுந்தா?
உழலும் எம்மை சிறைவிடுத்து,
உறுதியோடு மீட்கவா? அதை−
உன் பணியாய் செய்யவோ?

காரணமே ஏதெனினும்−
ரணமானது என் மனமே;
ஆரணமே! என் அச்சுதனே!
மாறணுமே, என் மனநிலையே!

உனக்கு நேர்ந்த கொடுமை யெலாம்−
உன்மத்தனாம் கஞ்சனுபயம்;
எனக்கெதுவும் இயலாதெனினும்,
ஏன் அவன் மேல், பொங்குது சினம்?

குருதியில் நீ கலந்து விட, என்−
உறுதி இங்கு தளர்ந்ததே;
பரிதியாய் புவி வந்தவனே! என்−
பரிதவிப்பை, அகற்று நீயே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s