பிரிந்து வர மனமில்லாமல், கோவர்த்தனத்தை விட்டு, வெளியே வந்தாயிற்று.. அடுத்தபடியாக கோகுலம் நோக்கி மனம் குதூகலிக்கும் ஒரு பயணம்.. முதலில் சென்றது நம் கண்ணனை, அந்த கருப்புக் கரும்பை, யசோதா மாதா உரலில் கட்டிய அந்த நிகழ்ச்சி தொடர்பான இடம்.
அன்று அவனை மட்டும் தான் ஆய்ச்சி தாம்பினால் கட்டினாள் என்றறிந்திருந்தேன்.
அந்த காட்சிக்கு சாட்சியாய், அந்த பொத்த உரல் அங்கேயே இருப்பதையும், மேலே உள்ள அந்த யசோதை கண்ணனின் திருஉருவ படங்களையும் கண்டபோது, அவளின் அந்த தாமோதரக் கயிற்றுக்கு, அடியேனும்தான் அகப்பட்டுப் போனேன்..
மேலுள்ள சித்திரத்தில், கயிற்றுடன் யசோதா மாதாவையும், நம் அப்பாவி(!?) அஞ்சுகத்தையும் காணுங்கால் ஆழ்வாரின் இந்த பாசுரமே, அடியேன் ஞாபகத்தில் வந்தாடியது..
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும்
வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும்
அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும்
அணி கோள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்ட யசோதை
தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே…
யசோதைக்கு சற்று திடகாத்திரமான நெஞ்சு என்றுதான் சொல்ல வேண்டும்.. அவள் தொல்லை இன்பத்தின் இறுதி கண்டாள்.. அடியேனுக்கோ, நம் கண்ணனின், இந்த கோமளமான, பூந்தளிர் ஒக்கும் திருமேனியைப் போய், அந்த முரட்டுத் தாம்புக்கயிறினால் (என்னதான் பழசென்றாலும், உறுத்தாதா என்ன?) கட்டிய அவள் மீது ஒரு சினமும், அந்த சினத்தை பின்தள்ளிய சோகத்தினாலும், நெஞ்சில் குருதியே கொப்பளிக்கத் தொடங்கியது..
அதற்குள், அங்கே சேவை செய்து வைக்கும் கோயில் பூஜாரிகள் ஸ்தல புராணங்களையும், ஸ்தான விஷேஸங்களையும் சொல்ல ஆரம்பித்தார்கள்..
(ஹிந்தி, ஹம்கோ தோடா, தோடா ஆதா ஹை! ஹரே பாயியோம் ஓளர் பஹனோம்…
முஜே விஸ்வாஸ் கீஜியே ஜி..)
கோகுலத்தில் மொத்தம் 80 லக்ஷம் பசுமாடுகளாம்.. எல்லா பசு மாடுகளின் கயிற்றையும் கடன் வாங்கி, யசோதா மாதா கட்டினாளாம்.. (அம்மாடியோவ்…அத்தனை நேரமா நம் குழந்தை கால்கடுக்க அங்கே நின்றது?.. இது மாதிரி அவனை செய்ததற்கு உனக்கு ப்ராயச்சித்தமும் உண்டோடி?..நல்லவேளை.. அடியேன் அப்பொழுது அங்கில்லையோ, நீ தப்பித்தாயோ..!)
ஒவ்வொரு முறையும் கயிற்றை இணைத்துக் கட்டும் போதும் இரண்டங்குலம் குறைந்ததாம்.. சலித்து விட்டாளாம் யசோதை.. கண்களின் ஓரத்தில் கண்ணீர் வேறாம்! அப்பொழுது நம் கண்ணன் வினவினானாம்.. அம்மா, நீ என்னை (ஊரார் பழிப்பதனால் ஏற்பட்ட) சினத்தினால் கட்டுகிறாயா, இல்லை, (இனியொரு முறை எவருடைய பழிச்சொல்லுக்கும் இவன் ஆளாகக் கூடாதென்ற) அன்பினால் கட்டுகிறாயா, சொல்..
சட்டென்று யசோதை சொன்னாளாம்..”அன்பினால் தானடா கட்டுகிறேன்” என்று..
அப்பொழுது கண்ணன் சொன்னானாம்.. “அம்மா சினத்தினால் பெருகுகின்ற உன் கண்ணீர் சூடாக இருக்கும்.. அன்பினால் பெருகினால், அது குளிர்ச்சியாக இருக்கும்.. உன்னை நீயே பரிசோதித்துக் கொள்” என்று!
அப்பொழுது இல்லையில்லை இது அன்புக் கண்ணீர்தான் என்றாளாம்..
கண்களின் உட்புறத்திலிருந்து ஒழுகினால், அது சினத்தினாலும், வருத்தத்தினாலும் விழுகின்ற கண்ணீர்.. வெளிப்புறத்திலிருந்து வழிந்தால், அது அன்பினால் உருகி, ஆனந்தத்தினால் பெருகி வருகிறது என்று குழந்தை விஸ்தாரமாகப் பாடம் வேறு எடுத்தானாம்..
பிறகு தானே, அவளுக்கு, ஐயோவென இரங்கி, தன்னைப் பிணைத்துக் கொண்டானாம்.. இதற்கு அடியேன், திருமதி.Bala Sivakumar அவர்களின் பதிவின் கீழ் எழுதியிருந்ததையே, மீள் பதிவாக்குகிறேன்..
கண்ணால் நீயும் கட்டினாலே,
கண்ணன் உனக்கு அடங்குவானே;
கயிறும் இங்கே வேணுமாம்மா?
கன்றிப் போகாதோ, என் உடலே?
நாமமே அழுத்திச் சொல்லா நீயும்−
நந்தன் மகனை தண்டிப்பாயா?
தாமம் போடும் கோடுகளெல்லாம், என்
தாயே, கண்டும் நீ தாங்குவாயா?
வாமனன், வந்தான் எனக்காக என்று
வாரி அணைத்தெனைக் கொஞ்சுவாயே;
சோமனைக் காட்டி, சோறும் ஊட்டி,
சீயம் இவெனன்று சொல்லுவாயே!
நேமங்கள் ஏதடா உனக்கே என்று,
நாளெல்லாம் திரிந்திட விடுவாயே;
ஆமது உனக்கே ஆய்ச்சி என் அகமென்று,
அழுந்த ஒரு முத்தும் இடுவாயே!
ஏமம் ஈதென்றா சின்னஞ் சிறு கயிறால்,
இன்றென்னைக் கட்டிட நினைத்தாய் நீ?
சேமத்தை வேண்டினால், சிந்தையால் கட்டுவாய்;
சிக்குவான் கண்ணனும், அகலானே!!
(இதன் பின்னர் அங்கிருக்கும் பூஜாரி, நாங்கள் எப்படி அந்த பொத்த உரலிடம் ப்ரார்த்தனை செய்ய வேண்டும் என்பதையும், கண்ணனிடம் என்னென்ன கேட்க வேண்டும் என்பதையும் மிக அழகாக, மனம் உருக, சொல்லிக் கொடுத்தார்..சமய சந்தர்ப்பங்களை அனுசரித்து, அதை நாளை பதிவிடுகிறேன்.. அடியேன்.. தாங்கள் அனைவரும் இந்த க்ருஷ்ண யாத்திரையில் அடியேனொடு சேர்ந்து பயணிப்பதை க்ருஷ்ண ஸங்கல்பமாகவே, அடியேன் உணர்கிறேன்.. பின்னூட்டமிட்ட அன்பு சகோதர சகோதரிகளுக்கு, தனித்தனியாக பதிலளிக்காமைக்கு அடியேனை, தயைக்கூர்ந்து தவறாக எண்ண வேண்டாம்..
முதலில் நேரமின்மை
இரண்டாவது சார்ஜ் இன்மை
மூன்றாவது நெட் இன்மை
என்ற மும்முனைத் தாக்குதலுக்கு அடியேன் ஆட்பட்டிருக்கிறேன்.. பயணம் முடிந்து வந்தவுடன் தங்கள் அனைவருக்கும் விடை தருகிறேன்..
ராதேக்ருஷ்ணா