(ஶ்ரீக்ருஷ்ண யாத்ரா − 4)

இப்பொழுது இந்த பூஜாரி சொன்ன தாமோதர சரித்திரத்தில் மேலும் தொடர்வோம். உரலில் கட்டிப் போடப்பட்ட கண்ணனை கடமை அழைக்கிறது. ஆம். குபேர குமாரர்களான நளகூபன்,மணிக்ரீவன் இவர்களது சாப விமோசனம் நிகழ வேண்டுமே..
இவர்களது கூற்றின்படி நாரத மஹர்ஷியால், இவர்கள் இருவரும் மூன்று லக்ஷம்(!) ஆண்டுகளுக்கு மரமாக நிற்கும் படி சபிக்கப்பட்டிருக்கிறார்கள். எம்பெருமானின் க்ருஷ்ண அவதாரத்திற்காக காத்திருக்கிறார்கள். க்ருஷ்ண அவதாரம் நிகழ்ந்து சில வருடங்களாகியும், அவன் க்ருபைக்குத் தாங்கள் இன்னமும் பாத்திரமாகவில்லையே என்று தினமும் மனம் வருந்திய வண்ணம் இருக்கிறார்கள்.

அன்று தீபாவளித் திருநாளாம்..(இது எப்படி, என்பது அடியேனுக்குப் புரியவில்லை. நரகாசுர வதம் நிகழ்ந்த பின்னர்தானே, தீபாவளிக் கொண்டாட்டமே! இந்த சந்தேகம் விலக வேண்டுமென்றால், அவர்களுக்கு புரிகிற மாதிரி ஹிந்தி பேச வேண்டும். “அப்னா ஹிந்தி நஹி சல்தா ஹை” என்பதால் விட்டு விட்டேன்.)
நந்தகோப் மஹராஜ், கண்ணனுக்காக, தம் கைகளாலேயே பூரி செய்து கொண்டிருக்கிறாராம். யசோதை, ஒரு புறம் வடை தயார் செய்து கொண்மிருந்தாளாம். அவரவர் தத்தமது வேலைகளில் மூழ்கி இருந்த போது, அந்த “டமார்” என்ற பேரிடியான சத்தம்.. இந்த சத்தம் ப்ரம்ம லோகம் வரை எட்டியதாம்.. சிவலோகம் அதிர்ந்ததாம்..வானவர்கள் அனைவரும் அதிர்ந்து போயினராம். நந்தகோபர், அதிர்ச்சியில் தம் கையிலிருந்த மாவை எண்ணையில் போடாமல், எரிகின்ற நெருப்பிலேயே போட்டுவிட, எங்கும் ஒரே புகை மண்டலமாம்..(ஸத்யமாக இவையெல்லாம் அவர் சொன்னது தான். சொந்தச் சரக்கு ஏதுமில்லை.. அடியேனுக்கு ஹிந்தி சரிவர பேசத் தெரியாவிட்டாலும், மற்றவர் பேசினால், புரியுமாக்கும்!)
யசோதை, தன் கைகாரியத்தை, அப்படியே போட்டுவிட்டு, “க…..ண்…ணா…..” என்று அலறக் கொண்டே ஓடி வந்து, இரண்டு மரங்கள் சாய்ந்து கிடப்பதைப் பார்த்து, தானும் மூன்றாவது மரமாக சாய்ந்து விடுகிறாள். கோப, கோபியர்கள் எல்லாரும் தமது “ப்யாரி லாலுக்கு” என்னவாயிற்றோ என்று அலறிக்கொண்டு ஓடி வருகிறார்கள்..
ஆனால் நம் “காலா வாலா”(ஹிந்தி) ஒன்றுமே நடக்காதது போல, அதே அப்பாவி முகத்தோடு, இரண்டு மரங்களுக்கு இடையிலிருந்து( இடையன் அல்லவா) எட்டிப் பார்க்கிறான்! இப்படியாக அவர்களது “தாமோதர சரித்திரம்” நீள்கிறது..அந்த மரங்கள் வேரொடு சாய்ந்து விட்டதால் இன்று அவை இல்லை.

இந்த உரலின் சிறு குழியில் தீர்த்தம் சேர்த்திருக்கிறார்கள். பக்கத்திலேயே, அவன் எந்த பாறை மீது அமர்ந்து வெண்ணை உண்டானோ, அந்த பாறை. கீழே அவனது சரண கமலங்கள். இவையனைத்துமே, நிஜமாகவே மதுவொழுகும் மலர்களாலே அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. ஏனெனில் அந்த பூக்களை நாலைந்து தேனீக்கள் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.

முதலில் அந்த தீர்த்தத்தை, நமது கண்களின் மீது, “எல்லா த்ருஷ்டி தோஷமும்” விலக ப்ரார்த்தித்துக் கொண்டே, தடவிக் கொள்ளச் சொல்கிறார்கள்.. இங்கே “த்ருஷ்டி தோஷம்” என்பது நமக்கல்ல.. நம் “த்ருஷ்டிக்கே” உள்ள தோஷங்கள்.. கண்ணனை மட்டுமே பார்க்க வேண்டிய கண்களை, வலுக்கட்டாயமாக விலக்கி, வேறு எவையெவற்றையோ பார்க்க பழக்கி இருக்கிறோமே, அந்த “த்ருஷ்டி தோஷம்” விலக ப்ரார்த்திக்கச் சொல்கிறார்கள். அதன் பிறகு, அவனைத் தாங்கிய அந்த பாறையின் மீது தலை வைத்து, ” இத்தனை நாளாய் உனைப் பிரிந்து உழன்று கொண்டிருக்கும் எம்மை, உன் கருணையினால், இனியேனும் தாங்கிப் பிடித்துக் கொள்ளடா” என்று ப்ரார்த்திக்க வேண்டும். மூன்றாவதாக, மண்டியிட்டு, அவன் சரண கமலங்களில் நம் சிரம் வைத்து, நமது “அஹங்கார, மமகாரங்களை”(நான், எனது) விலக்கிக் கொடுத்து, நழ்மை, அவன் சரண கமலங்களில் ஏற்றுக் கொள்ளச் சொல்லி ப்ராரத்தனை. இவையனைத்தும் மூன்று முறை செய்யச் சொல்கிறார்கள்.. மனம், வாக்கு, காயங்களால் நாம், இதுவரை செய்துள்ள தோஷங்கள் விலகவே, இப்படி மூன்று முறை.

இந்த ஸ்தலத்திற்கு உள்ளே நுழையும் போதே, முதலில் தவமிருக்கும் யமுனை தான் தென்படுகிறாள்.. எப்பொழுதும் ராதையோடு இணைத்தே பேசப்படும் இந்த கண்ணனை,”யமுனா க்ருஷ்ணா” என்று அனைவரும் அழைக்க வேண்டி இந்த தவமாம்! அதனால், இவள் சந்நிதி முன் நின்று கொண்டு, “யமுனா க்ருஷ்ணா” என்று மூன்று முறை சொல்லச் சொல்கிறார்கள். அடுத்ததாக, புத்ரபாக்யம் வேண்டி, யசோதை தவமிருக்கும் சந்நிதி. இந்த சந்நிதி முன் நின்று வேண்டாக் கொண்டால், நம் க்ருஹங்களிலும் ஸத்ஸந்தான ப்ராப்தி உண்டாகுமாம்.. அதற்கும் அடுத்தபடியாக, நந்தகோபர் புத்ர ப்ராப்திக்காக தவம் செய்யும் சந்நிதி. வெண் பளிங்கினால் செய்யப்பட்ட விக்ரஹம். ஆனால், இதுவென்ன, ஆண்டாள் சொன்னது போல், இவரில்லையே…
(தொடரும்)
(ராதேக்ருஷ்ணா)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s