(ஶ்ரீக்ருஷ்ண யாத்ரா −7)

இப்படி வாழ்க்கையில் நமக்கு ஒவ்வொரு நிகழ்வுக்கும் யாராவது ஒரு நல்வழிகாட்டி மட்டும் அமைந்துவிட்டால், எவ்வளவு நன்றாக இருக்கும்! எந்த உபத்திரவங்களும், உபாதைகளும் இல்லாமல், நமது பயணம் எவ்வளவு இயல்பாக அமைந்து விடும்! ஆனால், அப்படி ஒரு வாய்ப்பிற்கும், அவனல்லவா கடாக்ஷிக்க வேண்டும்!

அடியேனைப் பொறுத்தவரையில், தற்சமயம், இந்த வழிகாட்டி அமைந்ததும் அவனது பரம காருண்யமே. அவனே வந்தானோ, என்ற ஐயப்பாடும் அடியேனுக்கு வந்தது. காரணம், அந்த வழிகாட்டியின் பெயர் “கோபால்”.

இப்பொழுது, நாம் அவர் வாய் மொழியிலேயே, இந்த பயணத்தைத் தொடர்வோம்.

இதோ, நீங்கள் பார்க்கிறீர்களே, இந்த மண்ணில் தான் எங்கள்(!?) கண்ணனும், ராதையும், அவர்களது சகி, சகாக்களுடன் நித்தம் ஆடிப் பாடி, அகமகிழ்ந்து, தம்மையே தொலைத்த இடமாகும். இந்த மண்ணின் ஒவ்வொரு துகளிலும், எங்கள் கண்ணன், ராதாராணியின் காலடி பதிந்துள்ளது. இந்த அற்புதமான இடம் “ரமண் ரேடி” என்றழைக்கப்படுகிறது. நான் உங்களுக்கு இந்த இடத்தின் ஒவ்வொரு சிறப்பையும், பெருமையையும் சொல்கிறேன். கவனியுங்கள்.
இதோ, உங்கள் வலப்புறம் நீங்கள் பார்க்கின்ற இந்த அழகிய கட்டிடத்தில், இந்த வ்ரஜ பூமியின் ப்ராமணர்கள்(ஸ்ரார்த்தம் முதலிய பித்ரு கைங்கர்யங்களை செய்து வைப்பவர்கள்) தங்கள் குடும்பத்துடன் வசிக்கிறார்கள். இவர்களது குடும்ப பரிபாலனம், குழந்தைகளின் கல்வி, திருமணம் முதலிய பொறுப்புகளை, இந்த ஸ்தலத்தின் நிர்வாகமே ஏற்றுக் கொண்டுள்ளது. அடுத்ததாக, உங்களது இடதுபுறம், நீங்கள் பார்க்கின்ற இந்த அழகிய சின்னஞ்சிறு குடில்களில், இந்த வ்ரஜபூமியைச் சேர்ந்த சாதுக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் தனிமையில், கண்ணனை ஸ்வாஸித்துக் கொண்டு, தங்களின் இந்த பூலோக வாஸத்தைக் கழிக்கிறார்கள்.
(ஒரு க்ஷணம், “அடடா, இந்த பாக்யம் நமக்கு, வாய்க்கப் பெறவில்லையே”, என்ற எண்ணம் வந்து போகாமல் இல்லை.)

இதோ பாருங்கள் இந்த அழகிய மரங்களும், பூஞ்செடிகளும் எவ்வளவு பாக்யம் செய்திருக்க வேண்டும் என்று! இல்லையெனில் இவைகளுக்கு ப்ருந்தாவனவாசம் கிட்டியிருக்குமா என்ன?
அதோ தெரிகிறதே, அந்த அழகிய மண்வெளி… அது, அதுவே தான், கண்ணனும், ராதையும் தம்மை மறந்து களித்த இடம். வாருங்கள்..
இந்த இடத்தில் இன்று நீங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள் என்றால் அது எம் ராதாராணி, ஶ்ரீக்ருஷ்ணரின் அனுக்ரஹமே. அவர்கள் ஸங்கல்பமே, ஒருவரை இந்த இடத்திற்கு வரவழைக்கும்.

இதோ, இங்கே, நீங்கள் அனைவரும், தம்பதி சமேதராய் வட்டவடிவமாக அமருங்கள்..
போலோ…
வ்ருந்தாவன் ப்யாரி கீ… ஜெய்
ராதா ரமண் கீ… ஜெய்
ராதேக்ருஷ்ண கீ… ஜெய்

உங்கள் இரண்டு கைகளால், ராதா க்ருஷ்ணரின் பெயர்களைச் சொல்லிக் கொண்டே தாளம் போடுங்கள். கைகளை மேலே உயர்த்தி, ஹா..ஹா..ஹா.. என்று ஸந்தோஷம் பொங்க சிரியுங்கள்..
(பின்னே, எந்த இடத்திற்கு வந்திருக்கிறோம்! ஸந்தோஷம் பொங்காதா என்ன?)
இப்பொழுது, உங்கள் முன் இருக்கும், மண்ணை சமன் படுத்திக் கொள்ளுங்கள். இதில் சதுரமாக ஒரு வடிவம் செய்து அதற்கு ஒரு வாசல் அமையுங்கள். இப்பொழுது இதுதான், கண்ணனுக்கும், ராதைக்கும், நீங்கள் கட்டிக் கொடுத்திருக்கும் வீடு.
(நிற்க.. அடியேனது வெகுநாளைய சந்தேகமான கண்ணனை விட ராதை உண்மையிலேயே, வயதில் மூத்தவளா என்பதை அவரிடம் முன்பே கேட்டிருந்தேன். அவர் அதற்கு, ஆமாம், ராதை பதினொரு மாதங்கள் கண்ணனை விட மூத்தவள் என்று சொல்லியிருந்தார்.)
நீங்கள் கேட்டீர்கள் இல்லையா, ராதை கண்ணனை விட மூத்தவள் என்பதை இப்பொழுது நாம் கண்கூடாகப் பார்க்கலாம்.
உங்கள் இரண்டு கைகளையும் ஶ்ரீஜெயந்திக்கு கண்ணன் பாதம் போடுவதற்கு வைத்துக்கொள்வது போல வைத்துக்கொள்ளுங்கள். அதில் ஒன்றை ராதையாகவும், ஒன்றை கண்ணனாகவும் நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் இரண்டு கைகளையும், நீங்கள் கட்டிய வீட்டின் நடுவே பதியுங்கள். இப்பொழுது உங்களது கைகளின் பிம்பங்களைப் பாருங்கள். நீங்கள் ராதையாக உருவகப்படுத்தியிருந்த கையின் பிம்பம், நிச்சயம் கண்ணனாக வரித்திருந்த கையின் பிம்பத்தை விட ஒரு சுற்று பெரிதாகவே இருக்கும்.
(அடியேனுக்கு, அப்படியேதான் இருந்தது.)
இதைக் கொண்டே, உங்கள் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளலாம்.

இப்பொழுது அந்த பாத உருவங்களுக்கு விரல்களை வரைந்து, அந்த ராதாக்ருஷ்ணரின் திருவடிகளுக்கு உங்கள் சிரம் பதிய நமஸ்காரம் செய்யுங்கள்.. ராதாக்ருஷ்ணரைப் போல, நீங்களும் ஒற்றுமையோடு இருக்க வேண்டிக் கொள்ளுங்கள்.
ஒரு க்ஷணம் ராதாக்ருஷ்ணரை கண்முன்னே நிறுத்திக் கொண்டு, அந்த ராதாக்ருஷ்ணரின் பாதங்களை மற்றவர் கால்கள் படாதவாறு கலைத்து மண்ணிட்டு மூடிவிடுங்கள்..

(ராதையும் கண்ணனும் வருவார்கள்…)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s