( ஶ்ரீக்ருஷ்ண யாத்ரா −8 )

ஶ்ரீக்ருஷ்ணரின் பாத கமலங்கள் கோகுலம், ஆயர்பாடி, ப்ருந்தாவனம் போன்ற பல இடங்களில் பதிந்திருந்தாலும், இந்த இடத்திற்கு மட்டுமே உரிய தனிச் சிறப்பும், பெருமையும் என்ன தெரியுமா? எங்கள் ராதாராணி, க்ருஷ்ணன் இருவரது அங்கங்கள் அனைத்தையும், இந்த பூலோகத்தில், இந்த ஒற்றைய இடம் மட்டுமே ஸ்பரிஸித்து இருக்கிறது.
ஆமாம், ராதையும், கண்ணனும் ஒருவர் மீது ஒருவர், மண்ணை இரு கைகளாலும் வாரி இறைத்துக் கொண்டு, கட்டித் தழுவிய வண்ணம், உருண்டு புரண்டு கொண்டு, புழுதிப் பதுமைகளாக, எழுந்து நின்று, ஒருவரை ஒருவர் கேலியும் கிண்டலும் செய்த காட்சிகளின் அனுபவங்கள் இந்த ஒரு இடத்திற்கு மட்டுமே உண்டான பேறாகும். இப்படி ராதாக்ருஷ்ணரின் ஸர்வ அங்கங்களின் ஸம்பந்தம் பெற்ற இந்த இடத்தின் ஸம்பந்தத்தை நாமும் பெறுவோமா?

வாருங்கள்.. உங்கள் ஸர்வ அவயவங்களும் ராதையையும் க்ருஷ்ணனையும் துளித்துளியாக அனுபவிக்கட்டும்.. நன்றாக, இந்த மண்ணின் மீது படுத்துக் கொள்ளுங்கள்.. “க்ருஷ்ணா, க்ருஷ்ணா” என்று சொல்லிக் கொண்டு இந்தப் பக்கமாக நான்கு முறை உருளுங்கள்.. “ராதே, ராதே” என்று சொல்லிக் கொண்டு அந்தப் பக்கம் நான்கு முறை உருளுங்கள்.

(ஆயிற்று….அவர் சொன்னபடியே செய்தேன்..)

முதல் “க்ருஷ்ணா”வில் கண்களிலிருந்து “முணுக்” என்று ஜலம் எட்டிப் பார்த்தது. அடுத்த “க்ருஷ்ணா”வில், உள்ளுக்குள்ளிலிருந்து ஒரு கேவல். மூன்றாவது “க்ருஷ்ணா” வில் மனசெல்லாம் கனத்தது..ஒரு வேளை, க்ருஷ்ண ப்ரவேசத்தினாலோ?..
நான்காவது, “க்ருஷ்ணா”வுக்கு, ஊன் கரைவது புரிந்தது.
அடியேனுக்கு மட்டுமல்லாது, அது ராதாராணிக்கும் சேர்ந்து புரிந்திருக்க வேண்டும்.. சட்டென்று, நா, அவள் பெயரை, முதன் முறையாக, “ராதே, ராதே” என்று காயாத கண்ணீரோடு உச்சரித்தது. மனது, “எப்பேர்ப்பட்ட பாக்யவதியடி நீ” என்றது. இரண்டாவது, “ராதே, ராதே”வில், “எனக்கும் அவனை விட்டுத்தரக் கூடாதா என்ன?” என்று அவளிடம் தர்க்கம் செய்ய ஆரம்பித்தது. மூன்றாவது “ராதே, ராதே”வில் எங்கிருந்தோ, ராதையும், க்ருஷ்ணனும் கலகலவென்று சிரிக்கும் சப்தம் கேட்டது. நான்காவது “ராதே, ராதே”வில் இன்னவென்று புரியாத ஒரு மொழியில் அவர்களும் இருவரும் சத்தமாக பேசிக் கொண்டே, ஓடி விளையாடுவது தெரிந்தது.
எல்லாம் முடிந்து, அப்படியே, அந்த மண் தரையே, மாதவன் மடியாக சற்று நேரம் கிடந்தேன். ஆனால், இதுவென்ன, எப்பொழுது, கண்ணனும், ராதையும் யசோதை சகிதமாக இங்கு வந்தனர்?..
அழுத கண்ணீர் ஊடாக, சற்றே மங்கலாக மூன்று உருவங்கள் தெரிந்தன. ஒரு தாய். அருகே இரண்டு குழந்தைகள். மூத்தவள் பெண் குழந்தை. அவளுக்கு இளளயவன் வெகு அழகாக, துறுதுறுவென்று….ஒருவர் மீது ஒருவர் மண்ணை வாரி இறைத்துக் கொண்டு, கூச்சலும், கும்மாளமுமாய்.. தம்மை சுற்றி இருப்பவரை மறந்தவராய், தம்மையும் மறந்தவராய்.. அவர்கள் வாரி இறைக்கும் புழுதிப் படலம் நம் மீதும் ஒரு போர்வையாக…. ஏற்கனவே மண்ணில் அடியேன் புரண்டு எழுந்த புழுதி..இந்த குட்டி ராதா க்ருஷ்ணர்கள் கொட்டி அளந்த புழுதி.. அடியேனும் மொத்தமாய் ஒரு புழுதி உருவமாய்… சட்டென்று ஏதோ உறைத்தது.. இப்படித்தான் கண்ணனும், தன் கருநீல வர்ணம் மறையும் விதமாய், மண்ணும் புழுதியுமாய், யசோதை முன் சென்று நின்றிருப்பானோ? அது கொண்டே அவளும் அவனை நீராட்டுவிக்க பலவிதமாய் கெஞ்சியும், கொஞ்சியும் வேண்டியிருப்பாளோ? எதற்கும் மசியாத அந்த மாதவனிடம், அந்த ப்ரம்மாஸ்திரமான,
“நப்பின்னை காணில் சிரிக்கும்” என்பதை ஏவியிருப்பாளோ? ஏதேதோ உணர்வலைகள்…
அடியேனுக்கு சொல்லத் தெரிந்தால்தானே, தங்களுடன் பகிர்வதற்கு?…
இதன் இடையே, கோபாலின் குரல் (வழிகாட்டி) அடியேனைக் கலைத்தது..
“இந்த புழுதியை யாரும் தட்டி விடாதீர்கள்.. கண்ணனையும், ராதையையும் தங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்..”

கிடைக்கும் இந்த ஒரேயோரு அரிய சந்தர்ப்பத்தையும் அடியேன் விடுவேனா என்ன?..

கட்டிக் கரும்புன்னை
கை நழுவ விடுவேனா?
கட்டிப் போட்டெந்தன்
கண் முன் வைப்பேனே!
மறந்தே சற்றயர்ந்தால்−நீ
மாயம் செய்வாயே;
மயக்கும் பேரழகே! உன்னை
மடியில் ஒளிப்பேனே!

(ராதேக்ருஷ்ணா)

(கண்ணன் வருவான்…..) ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s