(ஶ்ரீ்க்ருஷ்ண யாத்ரா − 6)

ஆச்சு, கோகுலத்திலிருந்து மனதை வலிய விடுவித்துக் கொண்டு, அடியேன் வெகுநாட்களாக ஏங்கிய க்ருஷ்ண ஸம்பந்தம் பெற்ற வேறொரு இடத்தை நோக்கி பயணம்..
எத்தனை நாள் கனவு இது? நிஜமாகவே க்ருஷ்ணன் அடியேனை அவ்விடத்திற்கு, கடைசியில் அழைத்தே விட்டானா, என்ன? கிள்ளிப் பார்த்துக் கொண்ட போதும், அவன் அள்ளித் தந்த பேற்றை உள்வாங்க, மனம் ஏனோ மறுத்தது! இருக்காதா பின்னே?.. இன்றா,நேற்றா… இந்த இடம் வருவதற்கு, வருடங்களாய் தவமிருந்து, மாதங்களாய் காத்திருந்து, வாரங்களாய் தவித்திருந்து, தினங்களாய் துடித்திருந்து, மணித்துளிகளாய் நெகிழ்ந்திருந்து, நொடிகளாய் கரைந்திருந்ததெல்லாம், அந்த கண்ணன் அறிவானே…. அந்த கருப்புக் கல்லும்(செல்லக் கோபமாக்கும்!) சற்று அசைந்து கொடுத்து, அடியேனது விருப்பத்தை பூர்த்தி செய்யப் போகிறதோ?..

இராவணவதம் நடந்து முடிந்தது..பத்து மாத சிறைவாசம் முடிந்து, ஜானகியை ஸர்வாலங்கார பூஷிதையாக அலங்கரித்துக் கொண்டு வரச்சொல்லி, ஶ்ரீராமன் உத்தரவு.. அவன் சொல்படியே சீதா மாதாவை , நன்னீராட்டி, புத்தாடை அணிவித்து, நறுமண மலர்களாலும், வாசனை த்ரவியங்களாலும், திவ்ய ஆபரணங்களாலும் அலங்கரித்து ஶ்ரீராமன் முன்னே அழைத்து வந்து நிறுத்துகிறார்கள்.. ஆனால், தேவி தலை நிமிரவே இல்லையாம்! குனிந்த தலை, குனிந்தபடியே, தேவியின் முகம், ஏதோ இன்றுதான் முதன்முதலாக ப்ரபு ஶ்ரீராமனை வாழ்நாளிலேயே பார்ப்பது போலும், படபடப்பில், நிலம் பார்த்திருந்ததாம்!
இது பெரியோர்கள் நமக்குக் காட்டிக்கொடுத்த ஒரு விஷயம்..

அதுபோலவே, அந்த க்ருஷ்ண ஸம்பந்தம் பெற்ற அந்த இடத்து மண்ணை மிதித்த அடியேன் மனநிலையும்! அவன் அழைப்பு விடுத்திருக்கிறான்… அதனாலேயே, அடியேன் அங்கே! சீதா மாதா, படபடத்த நிலையினால், தலை குனிந்திருந்தாள்.. அடியேனோ, விவரிக்கவொண்ணா உணர்வுகளின் கலவையினால் எடை ஏறியதால், சிரம் தாழ்ந்து, விழிநீர் பெருக நடந்து கொண்டிருந்தேன்!

கண்களில் முதலில் பட்டது, இந்தவிடத்தின் மண்தான்! அங்கே, கோவர்தனகிரியருகே, வெறும் க்ருஷ்ண ஸம்பந்தமே பெற்றிருந்த காரணத்தினால், அந்த மண், குளிர்ச்சியும் மென்மையும் மட்டுமின்றி, அவனை மாதிரியே, கருப்பாகவும் இருந்தது.
ஆனால், இங்கே இந்த மண்ணோ, அதைவிட மென்மையாக, கழல்களுக்கென தயாரிக்கப்பட்ட ஒரு ப்ரத்யேக மெத்தையாகவே இருந்தது.. இந்த மண்ணின் கருப்போடு கூட, அது என்ன பொன்னாய் மினுமினுக்கும் துகள்கள்?.. கையில் எடுத்துப் பார்த்தேன்.. ஒட்டவில்லை. ஆனால் ஒளிர்ந்தது.. ஓ…ராதையின் திருவடி சம்பந்தமும் கிடைத்ததனால் வந்த மினுமினுப்பும், அதிகப்படியான மென்மையுமோ? விழிகள் அதிசயிக்க, மனம் க்ருஷ்ண ராதையின் ஸாந்நித்யத்தை உணரத் தொடங்கியிருந்த தருணம் அது…

எல்லாம் அமையப் பெற்றாலும் வாழ்க்கையில், எதுவொன்றுக்கும் ஒரு வழிகாட்டி தேவைப்படுகிறது, அல்லவா? அதுபோல, தாமாகவே, இங்கு ஒரு வழிகாட்டி எம்மை வழிநடத்திக் கொண்டு, இந்த ஸ்தலத்தின் இன்பங்களை எல்லாம், எமக்கு நுட்பமாக, ஒரு விவரணமும் தப்பாமல், உணர்வு பூர்வமாக! (அதுவல்லவோ முக்கியம்!) சொல்லிக் கொண்டு நடக்கத் தொடங்கினார்…

(ராதேக்ருஷ்ணா)

(இருவரும் வருவார்கள்..)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s