( ஶ்ரீ க்ருஷ்ண யாத்ரா − 10);

ஒரு ஐந்து தலை பாம்புக்கு அஞ்சக்கூடியவனா, இந்த அச்சுதன்! ஆயிரம் தலை அரவை, அணையாக்கி அரிதுயிலும் மாயவனுக்கு, அந்த மாதவனுக்கு, இந்த காளிங்கன் ஒரு கட்டெறும்பு தானே! இதை அறியாமல், தன்னைப் பெரியவனாய் ப்ரமித்து வருகிறான் அவன். பெரியோன் யாரெனக் காட்டுகிறான் இவன்….

“யாரடா நீ” என தலைத் தூக்கிப் பார்க்கிறான் அவன். தூக்கிய தலை மீதே பதம் வைக்கிறான் இவன்.

“ஐந்து” தலை இருக்கடா எனக்கு என்று அவன் துள்ள…
“அஞ்சுதலை” அறியாதான் நானடா என இவன் சொல்ல…

“ஆறுதலை”த் தேடிக் கொள்ளடா நீ! என்றவாறே விஷக்காற்றை, அவனுமிழ…

“தேறுதலே” என் திருவடிதானடா இனி உனக்கு, என இவனுரைக்க…
(எண்சாண் உடலுக்கும் சிரசே ப்ரதானம்..அந்த சிரசுக்கும், அவன் திருவடிதானே ப்ரதானம் என்பதாய்…)

ஆஹா, தனியொரு அரங்கமே தேவை இருக்கவில்லை..

அரவின் ஐந்து தலைகளை, ஐந்து கால் மண்டபமெனக் கொண்டு ஐயன் ஆடுகிறான்..ஆடுகிறான், ஆடிக் கொண்டே இருக்கிறான்..
விண்ணோர் அனைவரும் வியந்து நோக்கிய வண்ணம்..
மூன்று பகல், மூன்று இரவுகளாய், அடியேனுடைய கண்ணனின் பிஞ்சுப்பாதம், அவன் சிரமாடியதாம்….(பாதம் வலிக்குமேடா, பிடித்து விடவா?..)
அடியவர் வலியை, தன் வலியாய் ஏற்று, தன் “வலி”யால் அவனை வீழ்த்துகிறான்…

தகதிமி தகதிமி தா

தத்தளிக்க தத்தளிக்கவே…

தோம் தோம் தரிகிட தோம்..

தளிர்பாதம் நின்றாடுமே..

தாம்தீம் தகதிமிதா…

பார், பார், அதிசயம் பார்…

தோம் தோம் தரிகிட தோம்..

பாம்பினி மன்றாடுமே…

ஆடலுடன், பாடலும் தானே… புல்லாங்குழலில் இசை மதுரமாய் நிரம்பி வழிகிறதாம்.. காளிங்கன், அவ்விடத்தை விலகுவதற்கு முன்னமே, கண்ணனின் இசை எனும் மதுரத்தால் அந்த நீர் சுத்தியானதாம்.. சுற்றியுள்ள மரம் செடிகளெல்லாம் பசுமை பாய்ந்ததாம்!

இனி தனக்கு இங்கிடமில்லை என்றுணர்ந்த காளிங்கன்,
காலம் தாழ்த்தினால் தனக்கு உயிருமில்லை என்று புரிந்து கொண்டான். ஆமாம்…உயிருக்கு அவனும் மன்றாட, அவன் மனைவிமாரும் மன்றாட..
இவன் மனம் மாறுகிறான்..
“இந்த இடம் விட்டு நீங்கி நீ சமுத்திரம் அடை” என்ற கண்ணனின் கட்டளையை சிரமேற்கொண்டு, தரம், நிரந்தரமாய் மாறுகிறான்..
தன் சகாக்களின் மூர்ச்சையைத் தெளிவித்து மகிழ்கிறான் இவன்.

இவையனைத்தையும் சொல்லிக் கொண்டே, அந்த வ்ருக்ஷத்தை, ப்ரதக்ஷிணம் வந்தால், ஒரு அழகிய கும்பம்(குடுவை/சொம்பு) போன்ற ஒரு அமைப்பு, நமது கைகளுக்கு எட்டாத உயரத்தில் தெரிகிறது. அது, காளிங்கன் கருடனிடமிருந்து, அபகரித்து வந்த அமிர்தகலசமாம். நித்தமும் காளிங்கன் அதிலிருந்து கொஞ்சம் அமிழ்தை எடுத்துப் பருகியே, அவ்வளவு பலவானாக இருந்தானாம்! (இந்த கலசத்தை அடியேன் இணைத்துள்ள படத்தில் உற்று நோக்கினால், புரிந்து கொள்ளலாம். அடியேனுக்கு அவ்விடத்தை சிவப்பு வட்டமிட ஆசை. ஆனால் அது தெரியவில்லை. மன்னிக்கவும்..)

காளிங்கன் இந்த இடத்தை விட்டு நீங்கிய பிறகு, கண்ணன் அடிக்கடி தன் சகி ராதையுடன், இந்த மரத்தின் கிளைகளில் அமர்ந்து கொண்டு, அவளுக்காக வேணுகானம் இசைப்பானாம். அவன், அந்த வ்ருக்ஷத்தின் அடர்ந்த கிளைகளிடையே, ராதையோடு அமர்ந்து கொண்டு, தன் திருஅதரத்தால், நொடிக்கொரு முறை, “ராதே, ராதே” என்று அழைத்து ஸரஸமாடியதெல்லாம், அந்த வ்ருக்ஷத்திலே பதிந்துள்ளது என்று அந்த பூஜாரி காட்டிக் கொடுத்தார்.
சற்று ச்ரமப்பட்டு, குனிந்துதான், அவ்விடம் போக வேண்டியுள்ளது. அங்கு பார்த்தால், இதுவென்ன அதிசயம்?, “ஸ்வயம்பு” என்பார்களே, அது போல, வ்ருக்ஷத்தின் தண்டே, “ராதே, ராதே” என்ற எழுத்துக்களாய் அமைந்திருக்கிறது…
கண்ணனின் ஸ்வாஸம், வாஸம் எல்லாமே அந்த ராதையிடம் தான் என்பதை சொல்லவும் வேண்டுமோ?..

(கண்ணன் வருவான்…..)

(ராதேக்ருஷ்ணா..)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s