“ஆ”நிரை, நிறைவோ?…

யாராலே யார் இங்கு−
மயங்கி நின்றாரோ?
பேர் சொல்லத் தெரியாமலே−
பேதலித்தாரோ?

கரம் பட்ட போதினிலே−
கனிந்துருகுதே;
கள்ளூறும் போததையென−
மதி மயங்குதே!

சிரமெல்லாம் கிறுகிறுத்து−
சூழல் விலகுதே;
சித்தமுமே கலங்கிடவே−
செயல் உறையுதே!

மேனியது சிலிர்த்திங்கு−
மோட்சம் உணருதே;;
ஏனிது போல ஆகுதோ−
யதார்த்தம் நழுவுதே!

“ஆ” − ஈதென்ன ஓருணர்வு−
ஆர் சொல்வது?
“ஆ” நிறைந்த புணர்விதுவோ−
அகம் கொண்டது?…

(லயம் மறந்த சுயம்..)

காரிருள் அன்றோ, அன்னையின் கருவறை?
பேரிருள் அதனினும், பார் எனும் பெருஞ் சிறை!
வேரை விடுத்து வெளிவந்த நாளாய்−
நீரை விடுத்த மீனும், நானாய்..!

பெற்றவர் பாதியில், பிரிந்தே சென்றார்;
உற்றவர் என்று, ஓரிருவர் வந்தார்;
மற்றவர் எல்லாம், மனம் போல் நடந்தார்;
பற்றிடும் கரமதோ, கானல் நீராய்!

களித்திடத் தானே, வாழ்விது என்றார்;
தெளிந்திட நேரம், பின்வரும் என்றார்;
உளியால் உடைத்த பாறையின் துகளாய்−
எளிதாய் கரைந்தது, காலமும் வெகுவாய்!

விழித்துப் பார்த்திட நேரமும் இன்றி,
அழுத்திய சுமையில் அடங்கிய பிறவி−
பழியாய் சொல்லுது காரணம் பலதும்;
வழியும் நாடாது, அலையுது இன்னமும்!

லயம் காணவியலா நிலையும் கடந்து,
வயப்பட எண்ணினால், வாய்க்குமோ மருந்து?
நயந்திடும் நேரம் இனி எதுதான் என்று−
சுயம் சிந்திக்குதே, விளிம்பில் நின்று!

(உன்னோடு ஏதும் வேண்டாம்…)

அவரெல்லாம் சென்றாரோ,
தமது இல்லமே?
அபலை என்னை நினைந்தாயோ,
இந்த போதிலே?

தவறென்று மனம் உன்னைச்−
சாடவில்லையோ?
தாங்கி நான் பிடிப்பேனென−
நாடி வந்தாயோ?

மார்வம் சாய்ந்த மங்கை அவள்−
மறைந்ததும் எங்கே?
ஆர்வம் மேவ, உன்னை இறுக−
அணைத்தவள் எங்கே?

கனி இதழை பருகித் தானும்−
களித்தவள் எங்கே?
இனி எல்லாம் நீயே தான்−
என்று சொன்னவள் எங்கே?

கண்ணோடு கண்ணாகக்−
கலந்தவள் எங்கே?
பெண்ணாள வா என்று−
பின் தொடர்ந்தவள் எங்கே?

முந்தியிலே உன்னை மூடி−
வைத்தவள் எங்கே?
அந்திச் சிவப்பாய் அதரம் மாற−
சுவைத்தவள் எங்கே?

வகைக்கொன்றாய் அனுபவித்து−
வந்தாயோ இங்கே?
நகைப்புக்கு இடமானேனோ,
நானுமே இங்கே?

உன்னோடு பேசுதற்கு, இனி−
ஏதும் இல்லை;
என்னோடே வாதிடாதே−
எனக்குப் போதும் இல்லை!

(பசியாற்றவா, பரந்தாமா…)

அடங்காத பசியாக−
அச்சுதன் பசி ஆனதே;
இடம், பொருள், இங்கிதமும்−
இல்லையென்று போனதே!

விழிகளுக்குப் பசி வரவும்−
வழியெல்லாம் அவனைத் தேடுதே; பேசும்−
மொழிக்குப் பசி வந்தால்−
முனைந்தவனையே பாடுதே!

கரங்களுக்குப் பசி வந்திட−
காற்றினிலும் கை துழாவுதே;
வரமாகும் என் வைகுந்தனை−
வாரி அணைக்கவே, அது விழையுதே!

பதங்களுக்குப் பசி வந்தால்−
பாதை தேடி ஓடுதே;
பதிக்கும் தடத்தின் முள்ளும், கல்லும்−
பஞ்சு மெத்தையாய், அது ஏற்குதே!

நெஞ்சில் எழும்பும் பசியதுவோ, என்−
நாணத்தை, சூறையாடுதே;
கொஞ்சம் கூட வெட்கமின்றி−
கெஞ்சி அவனைத் தொடருதே!

மேனி முழுதும் பசிவந்திட−
மாதவனுக்காய், விதிர்த்து அடங்குதே;
ஏனிப்படி ஆகுதென்று−
என் உள்ளமும், எனை வினவுதே!

பசியடக்கிடும் மருந்தென்னவோ, அந்த−
பரந்தாமனிடமே இருக்குது; அதைப்−
புரிந்து அவனும் செயல்பட்டால், இந்த
பரிதவிப்பும், இனியேன் இருக்குது?..

(அழைக்கிறேன், மாதவன்…)

உன்னைத் தேடும், கண்ணன் இங்கே−
என்னை விட்டு, நீ போனதுமெங்கே?
கண்ணை விலகிய கருமணி நீயோ?
விண்ணை அகன்ற வெண்மதி தானோ?

எத்தனை நாளாய், நான் எதிர்பார்த்தேன்! நீ−
ஏய்ப்பதே செயலாய், ஏன் அலைந்தாய்?
அத்தன் நானென அறிந்திருந்தும், நீ−
அருகினில் வரவும் ஏன் மறந்தாய்?

பாதையில் முட்கள் பரவியே கிடக்க−
வாதையில் துவண்டே, துடித்திருந்தாயே!
தாதை என் துணை ஒதுக்கியதாலே−
பேதையாய் கண்ணீர், வடித்திருந்தாயே!

தாங்கிட உனை நான் காத்தே இருக்க−
வீம்புடன் எனை நீ மறுத்ததென்ன?
ஏங்கிய மனதுடன், எதிர்பார்த்திருக்க−
வீணே எனை நீ வெறுத்ததென்ன?

தாயின் தவிப்பை, உணரவுமில்லை; நீ−
சேயாய் என்னை உவக்கவுமில்லை!
ஆயின் அகமே அறிந்தவனாக, நீ−
நேயக்கரமது நீட்டவுமில்லை!

தனியாய் தரணியில் உழன்றே இருந்து−
இனியவை யாவும், நீ இழந்தாய்!
இனியும் தாமதம் செய்யாதே−
இணையவே வருவாய், என் குழந்தாய்!